திருப்பூரில் மேயர் வீட்டுக்கு கூடுதல் மின்கட்டணம் விதித்ததால் பரபரப்பு


திருப்பூரில் மேயர் வீட்டுக்கு கூடுதல் மின்கட்டணம் விதித்ததால் பரபரப்பு
x

பழைய வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தியதாக கூறி ரூ.41 ஆயிரத்து 59 கூடுதல் மின்கட்டணமாக விதித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் தாராபுரம் ரோடு புதுக்காடு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வீடு உள்ளது. இந்த வீட்டை புனரமைப்பு செய்யும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே பழைய வீட்டுக்கு பெற்றிருந்த மின் இணைப்பை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மின்வாரிய பறக்கும் படையினர் மேயர் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதில் வீடு கட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு பெறாமல், ஏற்கனவே பழைய வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தியதாக கூறி ரூ.41 ஆயிரத்து 59 கூடுதல் மின்கட்டணமாக விதித்தனர். கூடுதல் கட்டணத்தை உடனடியாக மேயர் தரப்பில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவாது: ‘மேயர் வீட்டில் ஏற்கனவே பழைய மின் இணைப்பு உள்ளது. கட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு கடந்த மாதம் 8 -ம் தேதி விண்ணப்பித்து அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டனர்.தற்காலிக மின் இணைப்பை புதிதாக வழங்குவதா? அல்லது ஏற்கனவே இருந்த பழைய இணைப்பை தற்காலிக மின் இணைப்பாக மாற்றுவதா? என்று முடிவு செய்ய அந்த பகுதி மின்வாரிய அதிகாரிக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் பறக்கும்படையினர், கூடுதல் கட்டணம் விதித்துவிட்டனர். அந்த கட்டணத்தையும் மேயர் தரப்பில் இருந்து செலுத்திவிட்டார்கள். மின்வாரிய தரப்பில் ஏற்பட்ட குழப்பத்தில் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேயர் தினேஷ்குமார் கூற் ‘வீட்டு புனரமைப்பு பணிக்கு தற்காலிக மின் இணைப்பு பெற விண்ணப்பித்து பணமும் செலுத்தப்பட்டுவிட்டது. மின்வாரியத்தின் தரப்பில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளேன்’ என்றார்.

1 More update

Next Story