இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 July 2025 12:50 PM IST
திருவள்ளூர் சரக்கு ரெயில் தீ விபத்து - ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசம்
திருவள்ளூரில் சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 90 சதவீத தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 July 2025 12:30 PM IST
3 மணி நேரத்தில் ரெயில் டேங்கர் தீ அணைக்கப்படும் - தீயணைப்புத்துறை தகவல்
திருவள்ளூரில் ரெயில் தடம்புரண்டு தீப்பற்றி எரியும் டீசல் டேங்கர்கள் 3 மணி நேரத்தில் அணைக்கப்படும் என்று தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 7 மணி நேரமாக தீப்பற்றி எரியும் நிலையில் இன்னும் 2 டீசல் டேங்கர்களில் தீ அணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைப்பது சிரமமாக உள்ளதால் ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையின் 15 அதிகாரிகள் உள்பட 85 பேர் ஈடுபட்டுள்ளனர்
ஹூண்டாய் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் தீயணைப்பு வாகனங்களும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
- 13 July 2025 11:57 AM IST
டெல்லி: கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது
டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் நடைபாதையில் படுத்திருந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் மீது ஆடி காரை ஏற்றி கொலை செய்த உத்சவ் சேகர் (40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரை ஒட்டியவர் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 July 2025 11:53 AM IST
தவெக ஆர்ப்பாட்டம் - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயக்கம் அடைந்த தொண்டர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 July 2025 11:50 AM IST
திருவண்ணாமலை: 2 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி
திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்மாத்தூர் முதல் தீபம் நகர் வரை 2 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலையில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரையிலான 4 குளிர்சாதன பேருந்துகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
- 13 July 2025 11:39 AM IST
சரக்கு ரெயிலில் தீ விபத்து: 70% தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்
சரக்கு ரெயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 044-2535 4151, 044 2435 4995 ஆகிய உதவி எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 13 July 2025 11:36 AM IST
24 குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் சாரி சொல்வாரா..? தவெக தலைவர் விஜய் கேள்வி
தமிழகத்தில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய விஜய், “"அஜித்குமார், சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர், அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, CM சார்... நீங்க Sorry சொன்னீங்க. தப்பில்ல. ஆனா இதே ஆட்சியில 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்காங்க, அவங்க குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்க
இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்க.
சாத்தான்குளம் வழக்கில் அன்று பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆனால் இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்குத் தான் மாற்றப்பட்டுள்ளது. அதே சிபிஐ, ஆர்எஸ்எஸ் - பாஜக கைப்பாவையாக தான் உள்ளது. நீங்கள் ஏன் அங்கே சென்று ஒளிந்துக்கொள்கிறீர்கள்?” என்று அவர் கூறினார்.
- 13 July 2025 10:25 AM IST
சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு - போலீசார் குவிப்பு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் உட்பட 5 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சென்னை முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- 13 July 2025 10:20 AM IST
திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- 13 July 2025 10:17 AM IST
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
* உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர்
* ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்
* சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர்
* மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர்
















