இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Sept 2025 10:31 AM IST
திருச்சியில் தவெக தலைவர் விஜய்.. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
- 13 Sept 2025 9:45 AM IST
தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,760-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.10,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளியும் கட்டுக்கடங்காமல் உயருகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.143க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 13 Sept 2025 9:26 AM IST
திருச்சியில் குவியும் தவெக தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது பிரசார பயணத்தை திருச்சியில் இன்று தொடங்குகிறார்.
இந்நிலையில் விஜய்யை வரவேற்க திருச்சி விமான நிலையம் மற்றும் மரக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
- 13 Sept 2025 9:23 AM IST
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம் - ரஷியா அறிவிப்பு
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று அறிவித்தது. இதன்படி அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என ரஷியா தெரிவித்துள்ளது.
முன்னதாக உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார், ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 Sept 2025 9:19 AM IST
‘இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ - மோகன் பகவத்
நாக்பூரில் பிரம்ம குமாரிகள் விஸ்வ சாந்தி சரோவரின் 7-வது நிறுவன நாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது இந்தியாவுக்கு அதிக வரி விதித்த அமெரிக்காவை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
"இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன. இந்தியா வலுவாக வளர்ந்தால் தங்களுக்கு என்ன நேரிடும், தங்கள் நிலை என்னவாகும் என்று உலக நாடுகள் நினைக்கின்றன. இதன் காரணமாகவே இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
ஆனால் நாம் எதுவும் செய்யவில்லை. அவர்கள் ஏழு கடல் தொலைவில் இருக்கிறார்கள். அவர்களுடன் நமக்கு எந்த தொடர்பும் இல்லை. பின்னர் ஏன் இந்த பயம்? மனிதர்களும் சரி, நாடுகளும் சரி தங்கள் உண்மையான சுயத்தை புரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகளை தொடர்ந்து சந்திப்பார்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதுடன், பயத்தை வென்றால் நமக்கு எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 13 Sept 2025 9:17 AM IST
"என் கணவர் ராசியானவர்.. அதனால்தான் விஜய் ஆண்டனி இப்போது.."- ஷோபா சந்திரசேகர்
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25-வது படமாக உருவாகியுள்ள படம் சக்தித் திருமகன். படத்தில் கதாநாயகியாக த்ரிப்தி, வாகை சந்திர சேகர், சுனில் கிருபவானி, செல்முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 19-ந்தேதி படம் திரைக்கு வருவதையொட்டி படத்தின் பிரீ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பேசுகையில், என் கணவர் ரொம்ப ராசியானவர். அவரை முதலில் என் கணவர் தான் சுக்ரன் படத்தில் நடிக்க வைத்தார். அப்போது அவர் வேறு ஒரு பெயர் வைத்திருந்தார்.
என் கணவர் அதை மாற்றி அவருக்கு விஜய் ஆண்டனி என்று வைத்தார். என் கணவர் ரொம்ப ராசியானவர் அதனால் தான் விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். 25 படத்தில் நடித்து விட்டார். விஜய் ஆண்டனி தேர்வு செய்யும் கதை வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கும். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 13 Sept 2025 9:16 AM IST
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 21-ந்தேதி சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்பட சுமார் 3000 பேர் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
- 13 Sept 2025 9:12 AM IST
விவசாயிகள் போராட்டம் குறித்த அவதூறு: நடிகை கங்கனா ரணாவத் மீது சுப்ரீம் கோர்ட்டு காட்டம்
டெல்லியில் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தனது எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துகளை பகிர்ந்து இருந்தார்.
- 13 Sept 2025 9:11 AM IST
பில் சால்ட் அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியில் மிரட்டியது. அந்த அணியில் பில் சால்ட் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 141 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
- 13 Sept 2025 9:09 AM IST
உலக குத்துச்சண்டை போட்டி: இறுதிப்போட்டியில் ஜாஸ்மின்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனையான அலிஸ் பம்ப்ரேவை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.
இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகி இருக்கிறது. இது இந்தியாவின் 4-வது பதக்கமாகும். மீனாட்சி அடுத்து மங்கோலியாவின் லுட்சாய்கான் அல்டான் செட்செக்குடன் இன்று மல்லுகட்டுகிறார்.


















