இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Jun 2025 1:31 PM IST
கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான் - போலீசார்
சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்ததை அடுத்து முன் ஜாமீன் கோரி அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஐகோர்டில் போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
- 27 Jun 2025 1:09 PM IST
ராமதாஸ் உடன் செல்வப்பெருந்தகை தைலாபுரத்தில் சந்திப்பு
பாமக நிறுவனர் ராமதாசை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தைலாபுரத்தில் சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
- 27 Jun 2025 12:26 PM IST
த.வெ.க.வை என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி நடக்கிறது - ராஜேந்திரபாலாஜி
தவெக கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திரபாலாஜி, “தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது, எனவே கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியின் முடிவே இறுதியானது. கூட்டணியின் கட்டளைத் தளபதி எடப்பாடி பழனிசாமிதான்” என்று அவர் கூறினார்.
- 27 Jun 2025 12:04 PM IST
கொங்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் உத்தரவு
பாமகவில் தென் மாவட்டம் மற்றும் கொங்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மாவட்ட பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பாமக மாவட்ட பொதுக்குழுவை கூட்ட மூவர் குழுவையும் ராமதாஸ் அமைத்தார்
- 27 Jun 2025 12:00 PM IST
திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை - 2 பேர் கைது
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்து முன்னணி நிர்வாகி சுமன், அவரது நண்பர் தமிழரசன் இருவரையும் தனிப்படை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நரசிம்ம பிரவீன் மற்றும் அஸ்வின் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Jun 2025 10:47 AM IST
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மேலும் ஜூலை 7-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
- 27 Jun 2025 10:24 AM IST
தேசிய விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - மத்திய கல்வி அமைச்சகம்
சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு இணையவழியில் இன்று முதல் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 27 Jun 2025 10:19 AM IST
திண்டுக்கல்: நுங்கு வெட்ட பனைமரத்தில் ஏறிய இளைஞர் கீழே விழுந்து உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகையாக்கோட்டை பகுதியில் நுங்கு வெட்ட பனைமரத்தில் ஏறிய இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
பால் நிறுவனத்தில் வேலை செய்யும் காளிமுத்து (21) என்பவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், அருகில் யாரும் இல்லாததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்
- 27 Jun 2025 10:17 AM IST
ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு - ஜூலை 14ல் தொடக்கம்
தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பணியிடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும். பணியிட மாறுதலுக்கு 30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
- 27 Jun 2025 10:07 AM IST
இமாச்சலபிரதேசத்தில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















