ஸ்டாலின் மாடல் அரசு விவசாயத்திற்கு எதிரானது - எடப்பாடி பழனிசாமி

தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2,500 வழங்கப்படுமென எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புதுக்கோட்டை,
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது;
"இன்றைய ஸ்டாலின் மாடல் அரசு விவசாயத்திற்கு எதிரானது. அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ரூ.16,000 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு திட்டம் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுகின்றனர். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்களுக்காக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருதங்கோன் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். வீட்டு மனை இல்லாத ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனை கொடுத்து, இலவச வீடுகள் கட்டித் தரப்படும். தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2500 வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஷிப்ட் முறையில் திமுக ஆட்சியில் மின்சாரம் தருகிறார்கள்."
இவ்வாறு அவர் கூறினார்.






