இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
x
தினத்தந்தி 2 May 2025 9:06 AM IST (Updated: 3 May 2025 8:59 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 2 May 2025 4:11 PM IST

    சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 21.7 கி.மீ ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 

  • 2 May 2025 4:06 PM IST

    ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறியிருந்த நிலையில் அரசு இவ்வாறு கூறியுள்ளது.

  • 2 May 2025 3:05 PM IST

    • சத்து மாத்திரையில் ஸ்டேப்ளர் பின் - விசாரிக்க உத்தரவு
    • திருவாரூர் அருகே சத்து மாத்திரையில் ஸ்டேப்ளர் பின் இருந்த விவகாரம்
    • மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
    • சுகாதார அலுவலரின் அறிக்கை தமிழக சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படும் - ஆட்சியர் மோகனசந்திரன்  

  • 2 May 2025 1:48 PM IST

    அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு


    ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர்.

    மகன், மகள் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த சூழலில், மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் தந்தை எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி உள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுஜாதா விசாரணை மேற்கொண்டார். 

  • 2 May 2025 1:45 PM IST

    4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் - அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை


    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற வகையில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வருகிற மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  • 2 May 2025 1:02 PM IST

    தொடர் படுகொலைகள்: தமிழகக் காவல்துறை செயலிழந்து விட்டதா? - அண்ணாமலை கேள்வி


    தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

  • 2 May 2025 12:52 PM IST

    கேபிள் டிவி கழகத்திற்கு விதிக்கப்பட்ட `ரூ.570 கோடி அபராதம்' - இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்டு


    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை, அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது.. மேலும் ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த நோட்டீசுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

    இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 285 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்


  • 2 May 2025 12:24 PM IST

    விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


    விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, காலை 11.33 மணிக்கு விழிஞ்ஞம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


  • 2 May 2025 12:23 PM IST

    லண்டனில் 'ரெட்ரோ' படத்தைப் பார்த்த பூஜா ஹெக்டே - யாருடன் தெரியுமா? : வைரலாகும் வீடியோ


    நடிகை பூஜா ஹெக்டே லண்டனில் 'ரெட்ரோ' படத்தை பார்த்துள்ளார். அவருடன் நடிகர் வருண் தவான் மற்றும் மிருணாள் தாகூரும் 'ரெட்ரோ' படத்தை பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


  • 2 May 2025 12:21 PM IST

    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த எனது கணவருக்கு தியாகி அந்தஸ்து போதும்: மனைவி உருக்கம்


    பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த தொழில் அதிபரின் மனைவி அஷன்யா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயங்கரவாதிகளை அரசாங்கம் ஒழிக்க வேண்டும். எனக்கு வேலையோ.. பணமோ.. வேண்டாம், எனது கணவருக்கு தியாகி அந்தஸ்து மட்டுமே போதும்; அதையே நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.


1 More update

Next Story