இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 3 Oct 2025 10:55 AM IST
நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேனாம் பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடி குண்டு மிரட்டல் வந்தது.
- 3 Oct 2025 10:47 AM IST
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
இலங்கை கடற்படையின் அத்துமீறலை தொடர்ந்து கண்டித்து வருகிறோம். ஆனால் மத்திய பாஜக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். எனவே கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு மீது மத்திய அரசுக்கு ஏன் வன்மம்? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?
கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை மந்திரி கூறுகிறார். இதற்கு இந்திய வெளியுறவு மந்திரி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா? தமிழ்நாடு மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரமாக போய்விட்டது. நமது மீனவர்களை காக்க மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 Oct 2025 10:40 AM IST
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
இன்று காலை வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் காட்டு யானை ஒன்று திடீரென புகுந்தது. யானை வந்ததை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கிருந்து செல்லாமல் கோவிலுக்குள்ளேயே உலாவியது. யானை யாரையும் தாக்கவோ. விரட்டவும் செய்யவில்லை.
- 3 Oct 2025 10:38 AM IST
‘ரஷியாவின் டிரோன் தாக்குதல்களால் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து’ - ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
ரஷியா வேண்டுமென்றே கதிர்வீச்சு அச்சுறுத்தலை உருவாக்குகிறது என ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
- 3 Oct 2025 10:32 AM IST
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் சென்றார். நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அதையடுத்து பேராவூர் பகுதியில் இன்று காலை நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டார்.
அப்போது 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட நடந்து முடிந்த ரூ.738 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், “நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சணை, பள்ளிக் கல்வி திட்டத்திற்கும் நிதி தரமாட்டார்கள், பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம்தான் படியளக்க வேண்டும். தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே ஒன்றிய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான். விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- 3 Oct 2025 10:19 AM IST
4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
- 3 Oct 2025 10:17 AM IST
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் தொடர்ந்து அதிகரிப்பு
இந்தியாவில் இருந்து டீசலை வாங்க ஐரோப்பிய நாடுகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே, ஏற்றுமதி இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களிலும் அதிக அளவில் நீடிக்க வாய்ப்புள்ளது. இதைபோல ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்தின் (எப்டா) உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு இந்தியா செய்து கொண்டது.
- 3 Oct 2025 10:16 AM IST
2021 திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி
ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று, நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
- 3 Oct 2025 9:54 AM IST
ராமநாதபுரத்தில் ரூ.738 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- 3 Oct 2025 9:49 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை
ஆயுள் தண்டனை கைதியும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகவும் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் பாதிப்பால் நாகேந்திரனின் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
















