இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
x
தினத்தந்தி 4 Oct 2025 9:08 AM IST (Updated: 7 Oct 2025 9:08 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 4 Oct 2025 4:52 PM IST

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

  • 4 Oct 2025 4:50 PM IST

    9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 4 Oct 2025 4:37 PM IST

    கலைஞர் பல்கலை. மசோதா விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

    கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதி முடிவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    அந்த மனுவில் தமிழக அரசு, "கவர்னர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டப்பேரவை முடிவுக்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 4 Oct 2025 3:23 PM IST

    கர்நாடக அரசின் திரைப்பட விழாவில் 4 விருதுகளை வென்ற "777 சார்லி" படம்

    கர்நாடக அரசின் 2021ம் ஆண்டிற்கான திரைப்பட விருது வழங்கும் விழாவில் "777 சார்லி" படம் 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர், 2வது சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பாடலாசிரியர் ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றுள்ளது.

  • 4 Oct 2025 3:20 PM IST

    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ஒருநாள் போட்டிக்கு கில் கேப்டனாக நியமனம்

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம் வருமாறு:- சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

    டி20 போட்டிக்கான இந்திய அணி விவரம் வருமாறு:- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

  • 4 Oct 2025 3:18 PM IST

    கரூர் சம்பவம்: யூடியூபர் மாரிதாஸ் கைது

    கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து மாரிதாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே விவகராம் தொடர்பாக யூடியூபர் பெனிக்ஸ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • 4 Oct 2025 2:01 PM IST

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா


    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், சிராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. 


  • 4 Oct 2025 1:57 PM IST

    "விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால்.. " - அமைச்சர் துரைமுருகன்

    வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும், அவர் உண்மையை கூறியிருக்கிறார். விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள், ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை” என்று அவர் கூறினார்.

  • 4 Oct 2025 1:23 PM IST

    நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு


    நாமக்கல் மற்று நாமக்கல் மற்றும் பரமத்தி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்ய இருந்த இடங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 4 Oct 2025 1:00 PM IST

    கரூர் கூட்ட நெரிசல்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை

    கரூரில் 41 பேர் உயிரிழந்த தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதன்படி கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்த ஆம்புலன்ஸ்களை இயக்கிய ஓட்டுநர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ்கள் வந்து மயக்கமடைந்தவர்களை ஏற்றிச் சென்றது குறித்தும், 108 அவசர உதவி எண்ணுக்கு எத்தனை அழைப்புகள் வந்தன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்

1 More update

Next Story