இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
x
தினத்தந்தி 8 July 2025 9:15 AM IST (Updated: 9 July 2025 9:10 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 8 July 2025 1:32 PM IST

    கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரெயில்வே குற்றச்சாட்டு


    விபத்துபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் முழு நிதியுதவியுடன் இந்த லெவல் கிராசிங்கிற்கு சுரங்க பாதை (அடிச்சாலை) அமைக்க தெற்கு ரெயில்வே முன்பே ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளது.

    இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்காக ரெயில்வே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதுடன், இதற்காக மன்னிப்பும் கோருகிறது என தெரிவித்து உள்ளது.


  • 8 July 2025 1:28 PM IST

    அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


    ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பொதுவெளியில் ராமதாசின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேறி உள்ளது.

  • 8 July 2025 1:25 PM IST

    பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து: மாணவர்களின் உடல்கள் ஒப்படைப்பு

    கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சூழலில் பிரேத பரிசோதனைக்கு பின் மாணவர்கள் நிமலேஷ், சாருமதி உடல் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில் மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

  • 8 July 2025 1:14 PM IST

    புதுச்சேரி: பைக் மீது லாரி மோதி 2 சிறுவர்கள் உயிரிழப்பு


    புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை கண் முன்னே இரு மகன்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பொறையூர் ஊசுட்டேரி அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்புறம் டிப்பர் லாரி மோதியது. விபத்தில் தந்தை நாதன் சபாபதியின் கண்முன்னே ரூபேஷ்(14), ஜீவா (7) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • 8 July 2025 1:10 PM IST

    14 நாடுகள் மீது புதிய வரி விதிப்புகள்; டிரம்ப் அறிவிப்பு இந்தியாவின் நிலை என்ன?


    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப். வரி விதிப்புகளை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மற்றும் சீனாவிடம் அமெரிக்கா ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது என்றார்.


  • 8 July 2025 1:08 PM IST

    கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி


    சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றின் மீது, விரைவாக சென்று கொண்டிருந்த கார் திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், சுற்றுலாவுக்காக சென்ற 4 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.


  • 8 July 2025 1:07 PM IST

    பொன்முடிக்கு எதிரான வழக்கு; மைக்கை பிடிக்கும் அரசியல் தலைவர்கள் யோசித்து பேச வேண்டும்: ஐகோர்ட்டு எச்சரிக்கை


    முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மதங்களை அவதூறாக பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இதற்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

    பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.


  • 8 July 2025 1:05 PM IST

    அஜித்குமார் வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்


    அஜித்குமார் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள், ஐகோர்ட் மதுரை கிளையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.


  • 8 July 2025 11:38 AM IST

    கடலூர்: பள்ளி வேன் விபத்து குறித்து கேட்டறிந்த ரெயில்வே மந்திரி


    கடலூர் செம்மங்குப்பம் ரெயில் விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கிடம் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபரம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 8 July 2025 11:27 AM IST

    கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது


    கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே கேட்டை மூடாமல் பள்ளி வாகனத்தை அனுமதித்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதன் பேரில் ரெயில்வே கேட்டை திறந்ததாக கேட் கீப்பர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story