பீகார் சட்டசபை தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


பீகார் சட்டசபை தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2025 5:29 PM IST (Updated: 8 Nov 2025 5:34 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தலில், தலைநகர் பாட்னாவில் 59.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் அதிக வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி, பீகாருக்கான தலைமை தேர்தல் அதிகாரி இன்று கூறும்போது, பீகாரில் வரலாற்று சாதனையாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது அதற்கு முன்பு 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான 57.29 சதவீத வாக்குகளை விட 7.79 சதவீதம் அதிகம் என்றார்.

இதேபோன்று, பீகாரின் முசாபர்பூர் மற்றும் சமஸ்திப்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் 70 சதவீதத்திற்கு கூடுதலான வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன்படி, முசாபர்பூர் நகரில் 71.81 சதவீத வாக்குகளும், சமஸ்திப்பூர் நகரில் 71.74 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 59.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

1 More update

Next Story