கரூர் சம்பவம்; சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை ஒப்படைத்த த.வெ.க.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
கரூர் சம்பவம்; சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை ஒப்படைத்த த.வெ.க.
Published on

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கடந்த அக்டோபர் 16-ந்தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.அப்போது 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் கடந்த 19-ந்தேதி தீபாவளி விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சி.பி.ஐ. தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சென்றிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் பண்டிகை விடுமுறையை முடித்து விட்டு, கரூருக்கு திரும்பி வந்தனர். இதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதுதொடர்பாக வணிகர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆதாரங்களை த.வெ.க. நிர்வாகிகள் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளை நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளனர். இது விசாரணைக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com