இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Jun 2025 12:44 PM IST
திருவண்ணாமலை: கிரிவல பாதையில் 80 டன் குப்பைகள் அகற்றம்
திருவண்ணாமலை வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டுச்சென்ற குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் கிரிவல பக்தர்கள் விட்டுச்சென்ற 80 டன் குப்பைகள் இன்று அகற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Jun 2025 12:20 PM IST
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க மாட்டேன் - ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குருமூர்த்தி, சைதை துரைசாமி பாஜக சார்பில் வராமல் தனிப்பட்ட முறையில் வந்தார்கள். தனிப்பட்ட முறையில் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் பேசினார்கள். பாஜக சார்பிலோ, அமித்ஷா சார்பிலோ யாரும் என்னிடம் பேசவில்லை.
பொதுக்குழு தேர்ந்தெடுத்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டதால், அன்புமணியின் பதவிக்காலம் காலாவதியாகி விட்டது. பாமக யாருடன் கூட்டணி என்பதையும், யார் வேட்பாளர் என்பதையும் நான் தான் முடிவு செய்வேன்.
பாமகவின் தொண்டர்களும், வாக்காளர்களும் எனது பக்கமே உள்ளார்கள். அன்புமணியை கட்சியில் இருந்து ஒருபோதும் நீக்க மாட்டேன். நான் தான் பாமக நிறுவனர், நான் தான் தலைவர், மக்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள்.
கட்சியை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி உழைக்கத் தயாராக இல்லை. அன்புமணி உழைப்பதற்கு தயாராக இல்லை என்பதால் அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
- 12 Jun 2025 11:52 AM IST
இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை - மு.க. ஸ்டாலின் பாராட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான்_முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!
முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.
இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Jun 2025 11:24 AM IST
குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள் - ராமதாஸ் வேதனை
என் கைகளைக்கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன். என்னையே குறிவைத்து இலக்காக்கி தாக்குகின்றனர். எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே அதல பாதாளத்தில் தள்ள பார்க்கிறார்கள். குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
- 12 Jun 2025 11:01 AM IST
ஆந்திராவில் புதிய திட்டம்: மாணவர்களின் தாயார் கணக்குகளில் ரூ.15,000
ஆந்திர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Jun 2025 10:28 AM IST
அன்புமணியுடன் பேச்சுவார்த்தை டிராவில் உள்ளது - பாமக நிறுவனர் ராமதாஸ்
தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கு உள்ள பிரச்சினை முழுமையாக யாருக்கும் தெரியாது. பாமக பிரச்னையில் சிறந்த ஆளுமைகள் 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது.
பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் அன்புமணி ராமதாஸ் உடனான சமாதான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது. முடிவு எதுவும் வரவில்லை” என்று கூறினார்.
- 12 Jun 2025 10:18 AM IST
கோவை, நீலகிரி விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.
இதன்படி முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- 12 Jun 2025 10:03 AM IST
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 12 Jun 2025 10:01 AM IST
மேட்டூர் அணை: டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று (வியாழக்கிழமை) காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீரை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவினார். இதனையடுத்து 8 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
- 12 Jun 2025 9:29 AM IST
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
திருச்செந்தூரில் ஜூன் 14ம் தேதி நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி கூட்டம் நடத்தவிருந்த நிலையில் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



















