இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Oct 2025 10:15 AM IST
'அதனால் முத்தக்காட்சிக்கு பயந்தேன்' - நடிகை அதிர்ச்சி கருத்து
நடிகை சோனம் பஜ்வா பாலிவுட் படங்களில் பிஸியாக உள்ளார். தற்போது அவர் ஏக் தீவானே கி தீவானியாத் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் பிஸியாக உள்ளார்.
- 14 Oct 2025 10:13 AM IST
வரலாறு காணாத புதிய உச்சம்...ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிய தங்கம் விலை
தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,825-க்கும். பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து ஒரு பவுன் 94,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலையை போல , வெள்ளி விலையும் பந்தயத்தில் வேகமாக முன்னேறுகிறது. வெள்ளி விலை மட்டுமே ஒரே நாளில் ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கும், ஒரு கிலோ, 2 லட்சத்து 0 6ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 14 Oct 2025 10:11 AM IST
நெட் தேர்வு டிசம்பர் 31-ந்தேதி தொடக்கம்; தேசிய தேர்வுகள் முகமை தகவல்
ஓராண்டில் ஜூன், டிசம்பர் என இருமுறை கணினி வழியில் நெட் தேர்வு நடைபெறும். இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.
அதன்படி 2025-ம் ஆண்டின் முதல் பருவத்துக்கான தேர்வு, கடந்த ஜூன் 25-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டன.
இதனை தொடர்ந்து, நடப்பாண்டு 2-ம் கட்ட டிசம்பர் பருவத்துக்குரிய நெட் தேர்வுக்கான அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நெட் தேர்வுக்கான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
- 14 Oct 2025 10:08 AM IST
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதனால், தீபாவளி அன்று மழை பெய்ய கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வளிமண்டலத்தில் கிழக்கு திசை காற்று அடுத்த 48 மணி நேரத்தில் (நாளைக்குள்) வீச தொடங்கும் என்றும் அதனால், வடகிழக்கு பருவமழை 16-ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்க வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- 14 Oct 2025 10:04 AM IST
அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல்: சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மறைந்த கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
- 14 Oct 2025 9:31 AM IST
தீபாவளி பண்டிகை: ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 320 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 18-ந் தேதியில் இருந்து வார இறுதி நாட்கள் தொடங்குவதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
அதன்படி அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டலம் சார்பில் நாளை மறுநாளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஈரோட்டில் இருந்து மதுரை, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஈரோட்டில் இருந்து மதுரைக்கு நாளை மறுநாள் 24 பஸ்களும், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு தலா 10 பஸ்களும், திருச்சிக்கு 13 பஸ்களும் கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 17-ந் தேதி முதல் 20-ந் தேதி அதிகாலை வரை மதுரைக்கு 35 பஸ்களும், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு தலா 15 பஸ்களும், திருச்சிக்கு 22 பஸ்களும் இயக்கப்படும். மேலும், மதுரையை கடந்து செல்லும் ஊர்களான திருச்செந்தூர், நாகர்கோவில், நெல்லை, ராமேசுவரம் போன்ற ஊர்களுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து தினமும் 10 பஸ்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டு உள்ளோம். எனவே மொத்தம் 320 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.














