இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Aug 2025 2:07 PM IST
பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை கஜானாவில் சேர்த்துள்ளோம்: டிரம்ப் பெருமிதம்
அமெரிக்காவுக்கு கிடைக்கும் வருவாய் பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதிலாக டிரம்ப் கூறும்போது, நாங்கள் இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம்.
அதனால் வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
- 27 Aug 2025 1:50 PM IST
பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது.
தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறுகிறார்; தேர்தல் ஆணையத்தின் இந்த மிரட்டல்களுக்கு ராகுல் காந்தி பயப்படமாட்டார். ராகுலின் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட தேர்தல் ஆணையத்தால் பதில் சொல்ல முடியவில்லை. ராகுல் காந்தியின் வார்த்தையிலும், பார்வையிலும் எப்போதும் பயம் இருக்காது. இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல்காந்தி உள்ளார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்.
400 இடங்கள் என கனவு கண்ட பாஜகவை 240 இடங்களில் அடக்கியது இந்தியாகூட்டணிதான். மெஜாரிட்டி என ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகின்றனர். மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும்.
கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவே பீகாரைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் ராகுல் காந்தியின் பலம் ஆகும். இதுதான் தேஜஸ்வியின் பலம் ஆகும். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதை எதிர்த்து பீகார் போர்க்குரலை எழுப்பியிருக்கிறது என்பதுதான் வரலாறு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
- 27 Aug 2025 1:19 PM IST
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்றும் அது விரைவில் வெடிக்கும் என்றும் அதில் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 27 Aug 2025 1:00 PM IST
50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் கூடியது. இந்த கூட்டத்தில் கூடுதல் வரி விதிப்புகளை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
- 27 Aug 2025 12:38 PM IST
விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் கோவில்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை பிரார்த்தித்து, அனைவருக்கும் எனது உளமார்ந்த விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
- 27 Aug 2025 12:36 PM IST
ராகுல் காந்தி பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
- 27 Aug 2025 12:29 PM IST
மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியபிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர்.
இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்க வேண்டும். மத்தியபிரதேசத்தை வளமான மாநிலங்களில் ஒன்றாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க.தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். போதைப்பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப்பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
போதைப்பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். போதைப்பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்தி விட்டது என அவர் கூறினார்.
- 27 Aug 2025 11:38 AM IST
விநாயகர் சதுர்த்தி: சிறப்பு பஸ்களில் 1.40 லட்சம் பேர் பயணம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் நேற்று ஒரேநாளில் 1.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து நேற்று வழக்கமான 2,092 பஸ்களுடன், 610 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
- 27 Aug 2025 11:38 AM IST
சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்குடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீன மாணவர்களுக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க போவதில்லை என்பது போன்ற பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், சீன மாணவர்களை எங்களுடைய நாட்டுக்குள் வர நாங்கள் அனுமதிக்க போகிறோம். இது மிக முக்கியம். அமெரிக்க கல்லூரிகளில் அவர்கள் படிப்பார்கள். 6 லட்சம் மாணவர்களை நாங்கள் அனுமதிக்க போகிறோம் என்பது முக்கிய விசயம். ஆனால், சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.
















