இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Aug 2025 6:55 PM IST
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு இன்று கூடியது. அப்போது, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் பரிந்துரையை ஏற்று, 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 27 Aug 2025 6:34 PM IST
ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவான நிலையில், லட்சுமி மேனனுக்கு கேரள ஐகோர்ட் ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி வரை லட்சுமி மேனனை கைது செய்ய தடை விதித்த கேரள ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
- 27 Aug 2025 6:11 PM IST
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் வெள்ளி வென்றார்
16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டர் பிரிவில் இந்தியாவின் 22 வயதான அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார். சீனாவின் சூ லியான்போவன் தங்கத்தையும், கொரியாவின் லீ ஜேகியோன் வெண்கலத்தையும் வென்றனர். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா 39 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, 459.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். சீன வீராங்கனை யுஜி யாங் (458.8 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஜப்பான் வீராங்கனை மிசாகி நோபதா (448.2 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷி சவுக்ஷி (402.8) 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முன்னதாக இந்திய நட்சத்திர வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் தகுதி சுற்றில் 22-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தார்.
- 27 Aug 2025 4:59 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும்போட்டியிடுகிறார்கள்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 104ல் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சீட்டு அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறும். துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற எம்.பிக்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள்
- 27 Aug 2025 4:54 PM IST
‘இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்தது’ - மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ரைட் சகோதரர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ‘புஷ்பக விமானம்‘ இருந்தது. மகாபாரத காலத்திலேயே டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டது. நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
- 27 Aug 2025 4:51 PM IST
கடலூர்,
கடலூரில் மாவட்டம் கரும்பூர் பஞ்சாயத்தில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பட்டியலின மக்களை நுழைய விடாமல் தடுப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்வதை தடுப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
- 27 Aug 2025 4:51 PM IST
சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 27 Aug 2025 3:56 PM IST
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: அடிக்கல் நாட்டும் விழா
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முள் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. முள் வேலி அமைக்கும் பணிகளும் முடிந்த நிலையில், இன்று ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.














