இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
தினத்தந்தி 28 Aug 2025 9:12 AM IST (Updated: 29 Aug 2025 9:09 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 28 Aug 2025 4:21 PM IST

    தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

  • 28 Aug 2025 4:15 PM IST

    ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர்; டிரம்பின் உதவியாளர் பரபரப்பு பேச்சு

    இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர். நுகர்வோர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவின் அதிக வரி விதிப்புகளால், தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். மோடியின் போருக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.

  • 28 Aug 2025 4:08 PM IST

    சந்திர கிரகணம்: செப். 7-ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் 22 உப கோயில்களில் செப்டம்பர் 7ம் தேதி மதியத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • 28 Aug 2025 3:29 PM IST

    ரெயில்வே வாரிய தலைவர் சதீஷ் குமாரின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு

    ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருபவர் சதீஷ் குமார். அவருடைய பதவி காலம் 2025, ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், அவருக்கு ஒரு வருட பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய ரெயில்வே துறையில் 1988-ம் ஆண்டு மார்ச்சில் பணியை தொடங்கிய அவர், அத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறார்.

  • 28 Aug 2025 1:28 PM IST

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு விதித்த நிபந்தனைகள் மாற்றியமைப்பு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    இருதய சிகிச்சை மேற்கொள்ள அசோக்குமார் அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. ஏற்கனவே அனுமதி அளித்த உத்தரவை மாற்றியமைக்கக்கோரி அசோக்குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக அசோக்குமார் தரப்பில், “அமெரிக்காவுக்கு தன்னுடன் தனது மனைவிக்கு பதிலாக மகள் வரவுள்ளார் என்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நேரில் தகவல் தெரிவிப்பதற்கு பதில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Aug 2025 1:21 PM IST

    ஓ.டி.டி ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெளியாகும் படங்கள்


    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து. பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.


  • 28 Aug 2025 1:16 PM IST

    அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு ‘நெத்தியடி பதில்’ அளித்த பா.ஜ.க. அரசு - மு.க.ஸ்டாலின்


    ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான 2023-24 நிதியாண்டுக்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) முடிவுகளை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அதில் தொழில்துறையில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மேலும் 2-வது இடத்தில் குஜராத், 3-வது இடத்தில் மராட்டியம், 4வது இடத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் 5வது இடத்தில் கர்நாடகா மாநிலமும் இடம்பெற்றுள்ளன.


  • 28 Aug 2025 1:09 PM IST

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து

    திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏழு ஆண்டுகள் நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் தன் உயிரெனக் காத்து, விட்டுச் சென்ற மாபெரும் பொறுப்பை ஏற்று நடத்திவரும் அண்ணன் தளபதி அவர்களின் பணிகள் யாவும் ஜனநாயகவாதிகள் அனைவருக்கும் எழுச்சியூட்டுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

  • 28 Aug 2025 1:00 PM IST

    திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்

    தனது திருமண நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில், குடும்பத்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார்.

  • 28 Aug 2025 12:55 PM IST

    நல்லகண்ணு உடல் நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன..?

    செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

    கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார். மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story