இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Aug 2025 12:49 PM IST
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ( வியாழன்) மிக கனமழைக்காக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்லது.
மேலும் கோவை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று ( ஆக.28ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 28 Aug 2025 12:45 PM IST
எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது.
நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை அலுவலகத்திற்கும் அதே மின்னஞ்சலில் இருந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மோப்ப நாய் உதவியுடன் அங்கு சோதனை நடத்தப்பட்டதில், அந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
- 28 Aug 2025 12:41 PM IST
“ஏங்க.. கூமாப்பட்டிக்கு வாங்க..” பிளவக்கல் அணையின் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
கூமாப்பட்டி பிளவக்கல் அணையின் அருகில் உள்ள பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம். செல்பி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 28 Aug 2025 12:38 PM IST
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்? வெளியான முக்கிய தகவல்
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- 28 Aug 2025 12:36 PM IST
75 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பின
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) தொடங்கியது. சிறப்பு பிரிவு. பொதுப் பிரிவு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு, துணை கலந்தாய்வு என அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று எஸ்.சி.ஏ. பிரிவில் இருந்து எஸ்.சி. பிரிவுக்கு இடங்கள் மாற்றப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்தது.
- 28 Aug 2025 12:34 PM IST
தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: வெளியான புதிய வீடியோ
தவெக மாநாட்டில் ராம்ப் வாக்கில் ஏறியது நான்தான் என்று அஜய் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனால், உண்மையாகவே மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான மற்றொரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், கீழே வீசப்பட்ட இளைஞரை, பவுன்சர்கள் பத்திரமாக இறக்கிவிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
- 28 Aug 2025 12:32 PM IST
அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. இந்திய அளவில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்ற நிலையில், மத்திய அரசு இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.
குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அரசியலமைப்பை மீறியதாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.
- 28 Aug 2025 12:10 PM IST
என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் உடற்கல்வி அறிமுகம்
முதன்முறையாக, மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான என்.சி.இ.ஆர்.டி. ( NCERT) பாடப்புத்தகங்களில் உடற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு ஏற்ப, என்.சி.இ.ஆர்.டி இந்த ஆண்டு பல்வேறு வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை புதுப்பித்து வருகிறது.
‘கேல் யோகா’ என்ற 3-ம் வகுப்பு பாடப்புத்தகம் தமிழ் முதல், பஞ்சாபி வரை 21 மொழிகளில் கிடைக்கிறது. இது கேல் யோகா முதல் கேல் யாத்ரா வரை தொடர்கிறது, இது 3 முதல் 8 ம் வகுப்புகளை உள்ளடக்கியது.
இந்தப் பாடப்புத்தகங்கள் யோகா மற்றும் வேடிக்கையான உடல் செயல்பாடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் வார்ம்-அப் பயிற்சிகள், முக்கிய உடல் செயல்பாடுகள் மற்றும் குளிர்ச்சியான படிகள் உட்பட ஒரு முழுமையான வழக்கத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
- 28 Aug 2025 12:03 PM IST
புதின், கிம் ஜாங் உன் உள்பட 26 வெளிநாட்டு தலைவர்கள் அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம்
சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 3-ஆம் தேதி இந்த வெற்றி தினப் பேரணி கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த பேரணி அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் போது சீனாவின் நவீன ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், அதிநவீன ஆயுதங்களின் அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது.
- 28 Aug 2025 12:00 PM IST
கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் கண்ணூர் ஒரு வழிப்பாதை சிறப்பு ரெயில் (06009) இயக்கப்படும் இந்த ரெயில் இன்று (வியாழக்கிழமை) சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















