இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 May 2025 5:22 PM IST
நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
கன்னட மொழி விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மதம், இனம், மொழி பேதமின்றி தன் கலைத்திறனால் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர்; கன்னட மக்களை தனது குடும்பமாக கருதுபவர் கமல்ஹாசன் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
- 30 May 2025 5:20 PM IST
பாமகவில் நிலவும் குழப்பங்களை விரைவில் சரி செய்வேன் - அன்புமணி ராமதாஸ்
சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
பாமகவில் குழப்பங்கள் நிறைய நடக்கின்றன; அவை அனைத்தும் தற்காலிகமானவை. தற்போதைய குழப்பங்கள் சரி செய்யப்படும்; அதை சரிசெய்து விடுவேன். முக்கியமான கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதுவரை எனக்கான சூழல் வரவில்லை; புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன். திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; வேற யாருக்கும் அதிகாரமில்லை.
உலகத்திலேயே ரொம்ப பிடித்தது எங்கள் அம்மா தான், அவர்களுக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும். என் அம்மா மீது சிறு துரும்பு கூட பட விட மாட்டேன். என் வாழ்க்கையில் எண்ணற்ற பழிகளை சுமந்தவன் நான். எவ்வளவோ அவமானங்களை சந்தித்துவிட்டேன். அபாண்ட பழிகள் என்னை மேலும் மேலும் வலுப்படுத்தின. இனி நாம் வேகமாக செல்வோம். யார் நீக்கப்பட்டாலும் கவலை வேண்டாம்; நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே நியமன கடிதம் அனுப்புவேன். என்னுடைய கடிதமே செல்லும்.
இனி நாம் வேகமாக முன்னேறுவோம்; ராமதாஸ் கொள்கைகளை கடைபிடிப்போம். நீங்கள் நினைத்தால்தான் எங்களை நியமனம் செய்ய முடியும்; அதுதான் நமது கட்சியின் விதி. “நிறைய மன உளைச்சலில் இருந்தேன். நேற்றுதான் விடுதலை கிடைத்தது. இனி எந்த தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து, நாம் வேகமாக பயணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- 30 May 2025 2:31 PM IST
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை எழும்பூர், சென்ட்ரல், கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில்பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.









