இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 May 2025 7:58 PM IST
கமல்ஹாசன் புகைப்படம் எரிப்பு - வழக்குப்பதிவு
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசிய விவகாரம் தொடர்பாக கமலின் புகைப்படத்தை, ஒருவர் தீ வைத்து கொளுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து கன்னட யுவ சேனை அமைப்பை சேர்ந்தவர் மீது பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 30 May 2025 7:43 PM IST
தமிழகத்தில் 2 மாவட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
தமிழகத்தில் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தேனி மாவட்டம் பெரியாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- 30 May 2025 7:34 PM IST
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை
மத்திய பிரதேச மாநிலம் லாஞ்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாம்ரைட், கடந்த கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்சல் அனுப்பியிருந்தார். அதில் இந்திய தேசியக் கொடி, வெடிபொருட்கள் தொடர்பான சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் அரசியலமைப்பின் நகல், புகார் கடிதம் ஆகியவை இருந்தன. புகார் கடிதத்தில் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த அவர், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்ற கட்டிடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில், முன்னாள் எம்.எல்.ஏ. சாம்ரைட்டுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி விகாஸ் துல் இன்று தீர்ப்பு வழங்கினார்.
- 30 May 2025 7:18 PM IST
முல்லைப்பெரியாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
முல்லைப்பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
- 30 May 2025 6:24 PM IST
தவெக சார்பில் நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும் விழா நிறைவு
தவெக சார்பில் காலை 10 மணி முதல் நடைபெற்று வந்த கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகளை தவெக தலைவர் விஜய் வழங்கினார்.
- 30 May 2025 6:19 PM IST
கட்சி அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி
டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் முற்றியிருக்கும் நிலையில் பாமகவின் கட்சி அலுவலக முகவரியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார். உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் புதிய முகவரியாக தியாகராய நகர் திலக் தெரு முகவரி இடம்பெற்றுள்ளது.
- 30 May 2025 5:41 PM IST
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக தலைவர் நீக்கம்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக தலைவராக இருந்த பச்சையப்பனை நீக்கி புதிய மாவட்ட தலைவராக ஜோசுவா என்பவரை நியமித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவராக, ஏ.ஜோசுவா இன்று முதல் (10.08.2025) நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 May 2025 5:31 PM IST
தமிழ்நாட்டின் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4 சதவிகிதம் குறைப்பு
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- 30 May 2025 5:27 PM IST
ஜூன் 9-ம் தேதி பள்ளி திறப்பு..?- தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் ஜூன் 9 ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது.
இந்த நிலையில், இந்தத் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.
- 30 May 2025 5:24 PM IST
தவெக மாவட்ட செயலாளர்களை அழைத்துப் பாராட்டிய விஜய்
தவெகவின் கல்வி விருது விழாவை ஒருங்கிணைத்த கட்சியின் மாவட்டசெயலாளர்களை விஜய் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் விரைவில் பல நல்ல காரியங்கள் செய்யவுள்ளோம்; தயாராக இருங்கள் என மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.