இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Aug 2025 8:20 PM IST
20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஈரோடு, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Aug 2025 7:30 PM IST
நீலகிரி ரிசார்ட்டுகளில் ஒலிப்பெருக்கி பயன்பாடு? ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோடை வாசஸ்தலங்களை கொண்ட நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவது வழக்கம். வெயில் காலங்களில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் சுற்றுலாவாசிகள் வந்து செல்வார்கள்.
அவர்கள் நீலகிரியில் தங்கும் விடுதி, ரிசார்ட்டுகளில் முன்பதிவு செய்து தங்குவார்கள். இதுபோன்று சுற்றுலா பயணிகள் தங்கும்போது, ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவது பற்றி சென்னை ஐகோர்ட்டு கேள்வி ஒன்றை இன்று எழுப்பியுள்ளது.
- 30 Aug 2025 7:03 PM IST
50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு; பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, 25 சதவீத கூடுதல் வரி உள்பட அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது என கோரி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
- 30 Aug 2025 6:42 PM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 15 நாட்கள் முன்கூட்டியே அதாவது மே மாதத்தின் மத்தியில் தொடங்கி பெய்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்வதால் ஏரி, குளங்கள், நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வழிகின்றன.கடந்த ஒரு வாரமாக மழை குறைந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.இதன் காரணமாக அங்கு ள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்த ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
- 30 Aug 2025 6:16 PM IST
ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி
ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி இந்தியாவின் மேம்பாட்டுக்கு ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
- 30 Aug 2025 5:46 PM IST
''ஒரு ஸ்டார் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்''...கண் கலங்கிய மமிதா பைஜு
''பிரேமலு'' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மமிதா பைஜு. தற்போது பிரதீப் ரங்கநாதன், சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார்.
- 30 Aug 2025 5:45 PM IST
நீதிமன்ற நேரம் வீணாகும் வகையில் பொதுநல வழக்கு; ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு
திருவள்ளூர் கோலப்பன் சேரியில் விதிகளை மீறி பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதேபோன்று நீதிமன்ற நேரம் வீணாகும் வகையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு, உத்தரவிட்டுள்ளது. மேலும், முறையான ஆய்வுகளை மேற்கொண்ட பின், பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
- 30 Aug 2025 5:42 PM IST
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதல்-மந்திரிகள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது உண்மையிலேயே ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா? அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- 30 Aug 2025 5:37 PM IST
17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Aug 2025 4:38 PM IST
பல நட்சத்திரங்கள் நடிக்க மறுத்த கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்ன மம்முட்டி - பகிர்ந்த இயக்குனர்
பல முன்னணி நடிகர்கள் நிராகரித்த பிறகு, ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மம்முட்டி ஒப்புக்கொண்டதாக இயக்குனர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
















