த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி


த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
x

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

சென்னை,

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி சனிக்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. அதேபோல், இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.

ஆனால் த.வெ.க. தரப்பில் கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட விபத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அது மட்டும் இன்றி ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த சி.பி.ஐ. அதிகாரிகள், கரூர் மாவட்ட காவல் துறையிடமிருந்து கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பெற்று கொண்டு விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் இருந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதனுடைய நகல், தமிழக வெற்றிக்கழக கட்சியின் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு இதற்கு அனுமதி அளித்து, அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

1 More update

Next Story