தாம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டு யாசகம் பெற்ற வடமாநிலத்தவர் 2 பேர் கைது


தாம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டு யாசகம் பெற்ற வடமாநிலத்தவர் 2 பேர் கைது
x

யாசகம் பெற்று பணம் சம்பாதிப்பதற்காக இருவரும் மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டுள்ளனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் அமைந்துள்ள மகாலட்சுமி நகர் சிக்னல் அருகே, கூன் விழுந்த மாற்றுத்திறனாளிகள் போல் தோற்றமளித்த ஒரு ஆணும், பெண்ணும் அங்கிருந்த வாகன ஓட்டிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அவர்களின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்த நிலையில், போலீசார் அவர்களை பிடித்த விசாரணை செய்தனர். அப்போது இருவரும் தங்கள் வேஷத்தை உதறிவிட்டு தலைதெறிக்க ஓடினார்கள். உடனே போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களின் பெயர் நிதின் பபன் பவார் மற்றும் தியா பவார் என்பதும விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் யாசகம் பெற்று பணம் சம்பாதிப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டுள்ளனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களை போல பலர் இதே போன்று பயிற்சி அளிக்கப்பட்டு சென்னை முழுவதும் யாசகம் பெறுவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story