சென்னை மழை நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு செய்தோம். கட்டுப்பாட்டு மைய உதவி எண்ணுக்கு வருகின்ற கோரிக்கைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினோம். மேலும், மாநகரில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளின் நிலை குறித்து கேட்டறிந்து போக்குவரத்துக்கு தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய ஆலோசனைகளை வழங்கினோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.






