தாம்பரம்-ராமேசுவரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கம்

தாம்பரம்-ராமேசுவரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம்-ராமேசுவரம், கோவை-ராமேசுவரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து நாளை (29-ந்தேதி) இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.06017) மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து வருகிற 30-ந்தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06018) மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
அதைபோல கோவை ரெயில்நிலையத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (எண்: 061123) நாளை (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரெயில் (எண்: 06124) ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இரவு 10.15 மணிக்கு புறப்படுகிறது. அந்த ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.
கோவையில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






