தேர்தல் களத்தில் விஜய்க்கு சவால்கள் உண்டு: திருமாவளவன்

திமுக கூட்டணிக்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்று திருமாவளவன் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற யாருடனும் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அது அவரது விருப்பம். அவர் யாருடனும் கூட்டணி வைக்கலாம். கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை, அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆகவே திமுக கூட்டணிக்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை, சூழலை பொறுத்து எடுத்துரைப்போம். எங்களைப் பொறுத்தவரை கட்சி நலனையும் நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுத்தோம். இனிவரும் காலங்களிலும் அவ்வாறுதான் முடிவெடுப்போம். எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும். அந்த காலத்தை உடனே கணித்து எல்லாம் சொல்ல முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை, மாநில கட்சியாக அங்கீகரித்து இருக்கிறார்கள். இதுபோல், ஒரு அதிகார வலிமை மிக்க கட்சியாகவும் அங்கீகரிப்பார்கள்.
அரசியல் களத்தில் எல்லோரும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். நடிகர் விஜய்க்கும், தேர்தல் களத்தில் சவால்கள் உண்டு. அதை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கூட்டணியை பொறுத்தவரையில் பல முறை கூறிவிட்டேன். திமுகவிடம் இருந்து வெளியேறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. வெறும் தொகுதி எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு முடிவு எடுக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.