பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்: த.வெ.க.வினர், வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை


பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்: த.வெ.க.வினர், வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை
x
தினத்தந்தி 20 Jan 2025 10:51 AM IST (Updated: 20 Jan 2025 11:57 AM IST)
t-max-icont-min-icon

பரந்தூர் நோக்கி வரும் த.வெ.க. தொண்டர்கள், வெளிநபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் போலீஸ் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களை த.வெ.க தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார். ச்ங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி .ஆனந்த் உறுதிபடுத்தி இருந்தார். இன்னும் சில மணிநேரத்தில் சந்திப்பு தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பரந்தூர் சென்று கொண்டிருக்கும் த.வெ.க தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடுகிறார். இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது விஜயை சந்திக்க வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன்படி பரந்தூர் நோக்கி வரும் த.வெ.க. தொண்டர்கள், வெளிநபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

மேலும் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அடையாள ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 13 கிராம மக்கள்தான் என்பதை உறுதிப்படுத்த அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காவல்துறை கேட்பதாக கூறப்படுகிறது. அடையாள ஆவணங்களை சரிபார்த்த பின் மண்டபத்திற்குள் காவல்துறை அனுமதி அளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே பரந்தூர் சென்ற த.வெ.க பொருளாளர் வெங்கட்ராமன் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுப்பப்படும் என்றும், ஏற்கனவே காவல்துறையிடம் எந்தெந்த கார்கள் அனுப்ப வேண்டுமென்ற பட்டியல் உள்ளது. உங்கள் கார் அந்த பட்டியலில் இல்லை என்றும் கூறி காவல்துறையினர் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story