கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம்?


கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம்?
x
தினத்தந்தி 24 Oct 2025 2:02 PM IST (Updated: 24 Oct 2025 4:34 PM IST)
t-max-icont-min-icon

கரூர் சம்பவத்தை தொடர்ந்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து மிக கவனமாக விஜய் அடியெடுத்து வைக்கிறார்.

சென்னை,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் கூறாமல் இருந்து வந்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் விஜய் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை ‘வீடியோ கால்’ மூலம் தொடர்பு கொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். அப்போது விரைவில் நேரில் சந்திக்க வருவதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில், கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து தனியார் அரங்கில் வைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூருக்கு நேரில் சென்று சந்திக்க பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், கட்சியில் அசாதாரண நிலையால், தொண்டர்கள், நிர்வாகிகள் செய்வறியாது தவித்தனர். இந்தநிலையில் விஜய் மீண்டும் களப்பணிக்கு திரும்ப உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மக்கள் சந்திப்பு, ரோடு ஷோக்களை தவிர்த்து விட்டு பொதுக்கூட்டங்களில் மட்டும் பங்கேற்று பேச விஜய் திட்டமிட்டு இருக்கிறார். மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் என்று திட்டமிடப்பட்டு, பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. மாலை 3 மணி முதல் 5 மணிக்குள் பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்கவும் விஜய் முடிவு செய்து இருக்கிறார்.

தற்போது கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதால், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து மிக கவனமாக விஜய் அடியெடுத்து வைக்கிறார். புதிய பயணத்திட்டம் குறித்த பட்டியல் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தின் வெளிப்பகுதியிலும் தக்க பாதுகாப்பு வசதிகளுடன் கூட்டங்களை நடத்த போலீசாரின் அனுமதி கோரப்பட உள்ளது.

பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வது குறித்தும், உரிய அனுமதி பெறுவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை விஜய் வழங்கியுள்ளார். விரைவில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்த திட்டத்தில் பிரசார பயண திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

1 More update

Next Story