திமுகவை வீழ்த்த விஜய் அதிமுகவுடன் சேர வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்

நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை,
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
இன்றைக்கு இருக்கும் ஸ்டாலின் தி.மு.க. அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. இதைத்தான் எடப்பாடியார் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். தற்போது வட கிழக்கு பருவமழையில் சாலைகள் எல்லாம் குண்டும், குழியாக காட்சி அளிக்கிறது. மக்கள் தத்தளிக்கிறார்கள். மதுரை மாநகராட்சி மேயரை நியமிக்க முடியவில்லை. மேயரை நியமித்தால் தானே வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கு மேயரை கூட நியமிக்க முடியாமல் தி.மு.க. அரசு முடங்கி போய்விட்டது.
கடந்த 10 ஆண்டுகள் இல்லாத வகையில் மதுரை மாநகராட்சியில் ஊழலுக்காக 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா, 2 நிலை குழு தலைவர்கள் ராஜினாமா, மேயர் கணவர் கைது, மேயர் ராஜினாமா, அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை இது போன்ற சம்பவம் தி.மு.க. ஆட்சியில் தான் நடைபெற்று உள்ளது இதுவும் ஒரு சாதனை தான். டி.டி.வி. தினகரன் கருத்தை யாரும் பெரிது படுத்த வேண்டாம். அவரது பேச்சு வேகாத பேச்சு, வெட்டிப் பேச்சு ஆகும்.
இன்றைக்கு ஸ்டாலின் கூட்டணி பலத்தில் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளார். இன்றைக்கு தி.மு.க.வை வீழ்த்தும் சக்திகள் எடப்பாடியாரின் பின்னால் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இல்லை என்றால் முடிவு வேறு விதமாக அமைந்து விடும். ஆந்திராவில் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவெடுக்கவில்லை. ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு துணை முதல்-அமைச்சராகி உள்ளார். விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் உள்ளார்கள். இந்த வாய்ப்பை அவர் நழுவவிடக்கூடாது.
54 ஆண்டுகள் மக்கள் செல்வாக்கு பெற்று 31 ஆண்டுகள் ஆட்சியில் அதிகாரத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்யும் அ.தி.மு.க.வுடன் அவர் பயணம் செய்ய வேண்டும். அது தான் மக்கள் எண்ணமாக உள்ளது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வுடன் சேர வேண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மட்டுமல்லாது த.வெ.க.வையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






