நாளை மறுநாள் ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டம்.. மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்


நாளை மறுநாள் ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டம்.. மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
x

நாளை மறுநாள் நடைபெறும் விஜய் பிரசார கூட்டத்துக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடமாகும். அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 கட்டுப்பாடுகள்

இந்த கூட்டத்துக்கு அனுமதி அளிக்க போலீஸ் துறையால் 84 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதில் மற்றும் ஆவணங்களை த.வெ.க.வினர் சமர்ப்பித்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கான அனுமதி பெறப்படவில்லை என போலீசாருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோவில் செயல் அலுவலரால் கடிதம் எழுதப்பட்டது.

எனவே கோவில் நிர்வாகத்திடம் இருந்து தடையில்லாத சான்று பெற்றுத்தரும்படி போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் 5 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மைதானம் சீரமைக்கும் பணிகள்

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வைப்பு நிதியாக ரூ.50 ஆயிரம், வாடகை கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அந்த கட்டுப்பாடுகளையும் த.வெ.க.வினர் ஒப்புக்கொண்டதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை தடையில்லாத சான்று வழங்கியது. எனவே 18-ந் தேதி த.வெ.க. பொதுக்கூட்டம் நடத்த ஈரோடு மாவட்ட போலீஸ்துறை அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே ஏற்கனவே போலீசார் கேட்ட கேள்விகளில் பதில் அளிக்கையில் ஒப்புக்கொண்டபடி தொண்டர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்துக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு கியூஆர் கோடுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

மேலும் போலீசார் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. கூட்டம் நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தனி இடவசதி

குறிப்பாக பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்து கட்சித்தலைவர் விஜய் பேசுவதை அருகில் இருந்து காணும் வகையில் மைதானத்தில் பெண்களுக்கான தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

1 More update

Next Story