சென்னையில் தமிழக அரசு சார்பில் நீர்வள மேலாண்மை பயிலரங்கம்


சென்னையில் தமிழக அரசு சார்பில் நீர்வள மேலாண்மை பயிலரங்கம்
x

பயிலரங்கத்தில் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பங்குதாரர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை,

சென்னை எழும்பூரில் இன்று நிலையான நீர்வள மேலாண்மைக்கான மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி" என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையின் சார்பில், இன்று (14.06.2025) நீர்நிலைகள் புத்துயிர் பெறுவது மற்றும் நீர்த்தேவையில் தன்னிறைவு பெறுவதின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு "நிலையான நீர்வள மேலாண்மைக்கான மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி" என்ற தலைப்பில் பயிலரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள ரேடிஷன் ப்ளூவில் நடைபெற்றது. இப்பயிலரங்கத்தில் தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை , சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பங்குதாரர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்பயிலரங்கத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளை வரவேற்று உரையாற்றிய நீர்வளத் துறை அரசுச் செயலாளர் ஜெயகாந்தன், நீர்நிலைகளைப் புத்துயிர் பெறச் செய்வதில் சமூகப் பங்களிப்பின் அவசியத்தை குறித்தும் முக்கியத்துவத்தை குறித்தும் வலியுறுத்தினார்.

பயிலரங்கத்தை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், இன்றைய நிலையில் தமிழ்நாடு 65 சதவிகிதம் நகரமயமாக்கலில் உள்ளது ஆகையால் மாநிலத்தின் நீர்நிலைகளை சரியான முறையில் பராமரிப்பதின் மூலம், தேவையான நீரை சேகரிக்கவும் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் பயன்படும் என்றும், இப்பணிகளை மக்கள் ஒருங்கிணைப்போடு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மராட்டிய மாநிலத்தின் மண் மற்றும் நீர் பாதுகாப்பு துறையின் தலைமைப் பொறியாளர் மற்றும் இணை செயலர் விஜய் டியோராஜ், அவர்கள் மராட்டிய மாநிலத்தில் மக்கள் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வரும் நீர்நிலைகள் மேம்படுத்தும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர், கார்த்திகேயன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில், சமூக பங்களிப்புடன் நீர்நிலைகளைப் புனரமைப்பது தொடர்பான பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்களும் நடத்தப்பட்டன.

நீர்நிலைகளைப் புத்துயிர் பெறுவதற்கான பயிலரங்கை முன்னெடுத்துச் செல்ல ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை உருவாக்கி, மக்கள் பங்களிப்புடன் பொது-தனியார் கூட்டமைப்பின் மூலம் நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த நிதித்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் வலியுறுத்தினார். நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) ரமேஷ் நன்றியுரையுடன் பயிலரங்கு நிறைவடைந்தது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story