தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் - நயினார் நாகேந்திரன் பேட்டி

கோப்புப்படம்
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் வழுதரெட்டி நினைவரங்கத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். கூட்டணி பற்றி விரைவில் பேசி முடிப்போம். மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செல்லக்கூட தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சிகளுக்கும் சரிசமமாக இருக்க வேண்டும். ஒருதலை பட்சமாக நடக்கக்கூடாது. முருக பக்தர்கள் மாநாட்டை பா.ஜ.க. கட்சி விளம்பரத்திற்காக நடத்தவில்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் மட்டும்தான் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. தமிழக முதல்-அமைச்சர் உள்பட அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
இந்த மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி தர மறுக்கிறார். அவரை மாநாட்டிற்கு அழைக்க சென்றால் எங்களை பார்க்க கூட அனுமதிக்க மாட்டார். இந்த மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று ஒருதலை பட்சமாக அறநிலையத்துறை அமைச்சர் செயல்படுகிறார்.
நடிகர் விஜய் தனி கட்சி தொடங்கியுள்ளார். அவர் நல்ல நடிகர். மக்களோடு நல்ல உறவு வைத்துள்ளார். தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது. தேர்தல் வருவதற்குள் தி.மு.க.வில் இருந்து நிறைய பேர் பா.ஜ.க. கட்சிக்கு வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






