செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம்: ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேனி,
ஆட்சி மாற்றத்திற்கு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.
இந்த நிலையில், செங்கோட்டையனின் பேச்சு குறித்து தேனியில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுகவை வளர்க்க உதவியவர் செங்கோட்டையன். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கழகம் ஒருங்கிணைக்க வேண்டும்; 'ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்' என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவின் சக்திகள் பிரிந்து இருப்பதால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டு பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருகிறது; அந்த நிலை மாறவேண்டும் என்றால் அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும்.
அதிமுக தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் இருந்து எந்தவொரு தொண்டரையும் வெளியேற்ற முடியாது. அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம். செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






