மனைவியின் கடந்த காலத்தை கேட்டு ஆடிப்போன 5-வது கணவர்


மனைவியின் கடந்த காலத்தை கேட்டு ஆடிப்போன 5-வது கணவர்
x
தினத்தந்தி 4 Nov 2025 4:31 PM IST (Updated: 4 Nov 2025 5:27 PM IST)
t-max-icont-min-icon

தற்போது ஆம்பூரை சேர்ந்த மணிகண்டனை 6-வது ஆக திருமணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் தனியார் பஸ் நிறுவனத்தில் டிரைவராக பணி செய்து வருகிறார். இவர் தனது குழந்தைகளுடன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த பெண்ணுடன் 2019-ல் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை தொடர்ந்து 2020-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் உள்ள பாட்டியை பார்க்க செல்வதாக கூறி குழந்தைகளுடன் சென்ற மனைவியை காணவில்லை. நான் ஆந்திரா சென்று குழந்தைகளை மீட்டு சொந்த ஊர் வந்து மனைவியை கண்டு பிடித்து தருமாறு சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தேன். போலீசார் விசாரணையில் அவர் சொந்த விருப்பத்தில் சென்றதாக கூறினார். இதனை தொடர்ந்து எனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் எனக்கு தெரிய வந்தது.மனைவியின் கடந்த காலத்தை கேட்டு ஒரு நொடி ஆடிப்போய்விட்டேன். மனைவியின் வண்டவாளம் தண்டவாளத்தை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

2013-ல் சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் ஏதோதோ காரணம் காட்டி வெங்கடேசனை என் மனைவி விரட்டி விட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்தநிலையில் 2016-ல் கோவையை சேர்ந்த சுரேஷ் என்பவரை ஆசைவலையில் வீழ்த்தி 2-வதாக திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சுரேஷ் குமார் திடீரென இறந்துபோனதாக கூறப்படுகிறது.அதன்பின்னர் 2017-ல் எனது மனைவிக்கு சுரேஷ்குமார் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை தற்போது மனைவியின் தாய் வளர்த்து வருகிறார்.

இதனை தொடர்ந்து செல்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து அவரிடம் சண்டைபோட்டு பிரிந்துள்ளார். அதன்பின்னர் 2019-ல் மதுரை மாவட்டத்தை சேர்ந்த லிங்குசாமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பமாக இருந்தபோது தான் என்னுடன் இன்ஸ்டாவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

என்னுடன் பழகுவதை அறிந்த லிங்குசாமி திட்டியதால் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்த நிலையில் திடீரென லிங்குசாமி இறந்துள்ளார்.இதனை தொடர்ந்து மூரார் பாளையம் வந்த அவர் எனக்கு திருமணமாகவில்லை இனி உங்களுடன் தான் இருப்பேன் என என்னிடம் கூறியதால் நான் அவரை நம்பி திருமணம் செய்தேன். எனது வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் பணம் 3 1/2 பவுன் நகைகளை எடுத்து சென்று விட்டார்.

தற்போது ஆம்பூரை சேர்ந்த மணிகண்டனை 6-வது ஆக திருமணம் செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. என் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தவியாய் தவித்து வருகிறேன். எனது மனைவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர் கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story