6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் இதுவரை 683 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் இதுவரை 683 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 286 பேர் பயனடைந்து உள்ளனர். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் 32 ஆயிரத்து 514 குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க எச்.பி.வி. வைரஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அடுத்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் 3 லட்சத்து 38 ஆயிரம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

இதேபோல, புதிதாக உருவான பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தி வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவர்கள் அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், அக்கல்லூரிகளின் கட்டிடப் பணிகளை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் தான் செயல்படுத்தியது” என்று அவர் கூறினார்.

1 More update

Next Story