தமிழர் வடிவமைத்த குறியீட்டை மாற்றியுள்ளது திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழர் வடிவமைத்த ரூபாய்க்கான குறியீட்டை திமுக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை,
2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார். இந்தநிலையில், தமிழ்நாட்டு பட்ஜெட்டில் தேவநாகரி எழுத்துருவான '₹' குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான 'ரூ' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டு இருந்தார்.
ரூபாய்க்கான தேசிய அடையாள குறியீட்டிற்கு பதில் தமிழ் எழுத்தான ரூ முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மொழி சர்ச்சைக்கு மத்தியில் தமிழை முன்னிலைப்படுத்தி பட்ஜெட் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழர் வடிவமைத்த குறியீட்டை மாறியுள்ளது திமுக என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,
2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட்க்காக, ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை திமுக அரசு மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு வரை ரூபாய் குறியீட்டை பயன்படுத்திய தமிழக அரசு தற்போது ரூ எழுத்தை முதன்மைப்படுத்தி உள்ளது. ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் மகன்தான் என பதிவிட்டுள்ளார்.