

மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இயலாமையின் உச்சத்தில் இருக்கும் தினகரன் அமமுகவை தொடங்கும்போது எவ்வளவு பேர் உங்களுக்கு தோள் கொடுத்து நின்றார்கள். அவர்களில் எவ்வளவு பேரை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினீர்கள்? மக்கள் பிரச்சினைகள் சார்ந்து எதுவுமே செய்தது இல்லை. ராணுவ கட்டுப்பாடோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி நடத்தி கொண்டு இருக்கிறார்.
இதை பொறுக்க முடியாமல் விசுவாசம், துரோகம், என பேசிக்கொண்டிருக்கிறார். முதல்-அமைச்சராக இருக்கும்போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? ஆண்டவனுக்கே வெளிச்சம். அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.
கோடநாடு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி ரகசிய ஆவணங்களை கிழித்து எறிந்து விட்டதாக சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. திமுகவை எதிர்க்கும் தவெக, தேமுதிக, பாமக கட்சிகள் அதிகவுடன் கூட்டணி சேர வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும். எல்லா கட்சி தலைவர்களையும் போல விஜய்யும் தன் தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக திமுக - தவெக இடையே தான் போட்டி என்கிறார்.
விஜய்க்காக நாங்கள் சட்டமன்றத்தில் பேசியதற்காக அவர் எங்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் நல்லதை செய்து கொண்டே இருப்போம். நிச்சயமாக நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.