'அ.தி.மு.க.வை கொள்கை எதிரி என்று விஜய் ஏன் சொல்லவில்லை?' - திருமாவளவன்

ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வது இயல்பானது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க.வுடன் கூடிக்குலாவி கூட்டணிக்கு செல்ல நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இல்லை என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்யின் கருத்து பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;-
"த.வெ.க. தலைவர் விஜய், தங்கள் கட்சியை ஒரு மாற்று சக்தியாக கருதி இந்த கருத்தை கூறியிருக்கிறார் என்று நம்புகிறேன். ஆனால் அ.தி.மு.க.வை பற்றி வெளிப்படையாக அவர் எதுவும் பேசியதாக தெரியவில்லை. அவரது கொள்கை எதிரிகளின் பட்டியலில் அ.தி.மு.க. இருக்கிறதா? இல்லையா? என்பதை அவரது பேச்சின் மூலம் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வது இயல்பானது. கொள்கை எதிரிகள் என்று தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் பற்றிதான் விஜய் பேசியிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வை கொள்கை எதிரி என்று விஜய் ஏன் சொல்லவில்லை? பரந்தூர் விமான நிலையம் பற்றி விஜய் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. அவரது போராட்டம் மக்களுக்கு நீதி பெற்று தருமானால் அதை நாங்கள் வரவேற்கிறோம்."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.