‘ஜன நாயகன்’ பட விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து ஏன்..? - தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்


‘ஜன நாயகன்’ பட விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து ஏன்..? - தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 Jan 2026 11:47 AM IST (Updated: 27 Jan 2026 1:34 PM IST)
t-max-icont-min-icon

‘ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

சென்னை,

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது.

பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 20-ந்தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ‘ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி ஆஷாவின் உத்தரவை ரத்து செய்தனர். முன்னதாக தங்களது வாதத்தை கேட்காமல் தணிக்கை சான்று தர உத்தரவிட்டதாக தணிக்கை வாரியம் தரப்பு கூறிய வாதம் ஏற்கப்பட்டது.

இதுதொடர்பாக நீதிபதிகள் அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜன நாயகன் படத்திற்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளன. ஒரு திரைப்படத்திற்கு எந்த மாதிரியான சான்று வழங்குவது என்பது தணிக்கை அதிகாரியின் முடிவாகும். வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதவாத மோதலை துாண்டுவதாக சில வசனங்கள் ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ளன. மத அடையாளங்களை அவதுாறு செய்வதை ஏற்க முடியாது

ஜனநாயகன்'பட வழக்கில் தணிக்கை வாரியம் தரப்புக்கு முறையான நேரம் வழங்கி தனி நீதிபதி விசாரிக்கவில்லை. மீண்டும் தனி நீதிபதி அமர்வில் முதலில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும். இதன்படி 'ஜனநாயகன்' திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு மீண்டும் ஐகோர்ட்டு தனி நீதிபதி பி.டி.ஆஷாவிற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பாமல் தணிக்கை சான்றிதழ் தர உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தணிக்கை வாரியத்திடம் விளக்கம் பெறாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உரிய விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தணிக்கை வாரிய அதிகாரி புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மத அடையாளங்களை அவதூறு செய்வதை ஏற்க முடியாது? படத்தில் பாதுகாப்புப் படை சின்னம் பயன்படுத்தப்பட்டதால் நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டது. தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

'ஜனநாயகன்' பட வழக்கு தனி நீதிபதியிடம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால் பட வெளியீடு மேலும் தள்ளிப் போகிறது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டை நாடுவது குறித்து ஜனநாயகன் தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story