பிரதமர், முதல்-அமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மதுபோதையில் பிரதமர், முதல்-அமைச்சர் வீடுகளுக்கு வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரதமர், முதல்-அமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள விசுவாசபுரத்தில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்தது. பின்னர் போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி என்பது தெரிய வந்தது. மேலும் அன்றைய தினம் இரவு சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு தொலைபேசியில் ஒருவர் பேசினார்.

அவர் தமிழக முதல்-அமைச்சர், பிரதமர் வீடுகள் மற்றும் குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் சைபர் கிரைம் மூலம் விசாரணை நடத்தப்பட்டபோது, குமரியில் இருந்து மர்மஆசாமி மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் பூதப்பாண்டி உச்சம்பாறை பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 32) என்ற வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மதுபோதையில் இப்படி செய்ததாக அதன் விபரீதத்தை உணராமல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த 2013-ம் ஆண்டு கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com