திருச்சி காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்


திருச்சி காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்
x

காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (24). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை பீமநகர் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து மார்சிங்பேடை பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரைச் செல்வனின் இரு சக்கர வாகனத்தை திடீரென வழிமறித்து மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி தாமரைச்செல்வன் கீழே விழுந்துள்ளார். அந்த கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தாமரை செல்வன் உயிர் தப்பிக்க அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் அடைக்கலம் தேடி ஓடியுள்ளார்.

இரவு பணியை முடித்துவிட்டு வீட்டில் உள்ள தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்ல போக்குவரத்து காவலர் செல்வராஜ் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டுக்குள்ளே துரத்தி சென்ற கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் சமையல் அறையில் நுழையவிட்டு, தாமரை செல்வனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

திருச்சி மாசிங்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் நிறுவன பணியாளர் தாமரைச்செல்வனுக்கும் சதீஷ் என்பவருக்கும் இடையே தகராறு என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தகராறில் சதீஷை தாமரைச்செல்வன் அடித்ததால் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சதீஷ், பிரகாகரன், நந்து, கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஒருவர் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இளைஞரின் உறவினர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அரசு மருத்துவமனை சாலையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

1 More update

Next Story