எட்டுத்திக்கும் செல்லும் ஏழு குழுக்களும் வெல்லும்!

ஆபரேஷன் சிந்தூரின் நியாயத்தை விளக்க செல்லும் நமது எம்.பி.க்களின் பயணம் வெற்றிப்பயணமாகவே இருக்கும்.
உலகம் முழுவதுமே 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலை இந்தியா தானாகவே தொடங்கிவிடவில்லை. கடந்த மாதம் 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காமில் இருக்கும் பைசரான் புல்வெளிக்கு சுற்றுலா வந்திருந்த 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இதில் 25 பெண்கள் தங்களின் குங்குமத்தை இழந்தனர். குங்குமத்துக்கு சிந்தூர் என்ற பெயரும் உண்டு. கணவனை இழந்த சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் திட்டமிட்டு இலக்கை நிர்ணயித்து களத்தில் இறங்கியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டும் இலக்காக வைத்து நன்கு திட்டமிட்டு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மட்டும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளைத் தவிர பாகிஸ்தானியர்கள் யாரும் கொல்லப்படவில்லை. ஆனால் உடனே பாகிஸ்தான் தன் ராணுவத்தின் மூலம் இந்திய எல்லைப்புற கிராமங்களில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். விடுமா? இந்திய ராணுவம். இதற்கு கொடுத்த பதிலடிகளை தாங்கிக்கொள்ளமுடியாமல் பாகிஸ்தான் மோதல் நிறுத்தத்துக்கு முன்வந்தது.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நிலைப்பாடுகளையும், ஆபரேஷன் சிந்தூரை இந்தியா மேற்கொள்ளவேண்டிய அவசியம், பயங்கரவாதிகளை மட்டும் அழித்த இந்தியாவின் துல்லிய தாக்குதல், பாகிஸ்தான் எப்படி இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்கிறது, பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதை மருந்துகளை எப்படி கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் அனுப்புகிறது? என்பது போன்ற பல தகவல்களை உலகின் எட்டுத்திக்குகளிலும் உள்ள 32 நாடுகள், ஐரோப்பிய யூனியனுக்கு சென்று விளக்குவதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 எம்.பி.க்கள் தலைமையிலான குழுக்களை இந்தியா அனுப்புகிறது.
பா.ஜனதாவை சேர்ந்த ரவிசங்கர், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய் ஜா, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் பிரிவு) சுப்ரியா சுலே, சிவசேனாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் இந்த குழுக்கள் செல்கிறது. காங்கிரஸ் கட்சி நாங்கள் அனுப்பிய எம்.பி.க்கள் பெயர் பட்டியலில் சசி தரூர் இல்லையென்று குற்றஞ்சாட்டினாலும் சசி தரூர் ஐ.நா. சபையில் பேசிய அனுபவமிக்கவர். வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரியாகவும் இருந்தவர் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் எம்.பி.க்கள், ஓய்வுபெற்ற வெளிநாட்டு தூதர்கள் என நிபுணத்துவம் வாய்ந்த பலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த எம்.பி.க்கள் குழுவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 31 பேரும், மற்ற கட்சிகளை சேர்ந்த 20 பேரும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. எங்கெங்கு இந்தியாவின் செய்தி போய் சேரவேண்டுமோ அந்த நாடுகள் இந்த குழுவினர் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடுகளைக் கொண்ட நாடுகளுக்கும் எம்.பி.க்கள் குழு செல்கிறது. மொத்தத்தில் நமது நட்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் நட்பு நாடுகளுக்கும் சென்று ஆபரேஷன் சிந்தூரின் நியாயத்தை விளக்க செல்லும் நமது எம்.பி.க்களின் பயணம் வெற்றிப்பயணமாகவே இருக்கும்.






