தெருநாய் தொல்லைக்கு ஒரு முடிவு


தெருநாய் தொல்லைக்கு ஒரு முடிவு
x

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற தமிழக தலைமைச்செயலாளர், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சாலைகளில், “உங்களை தெருநாய்கள் துரத்தவில்லையென்றால், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் முட்ட வரும்” என்று ஒரு வழக்கு மொழி உள்ளது. இது நாட்டில் நிலவும் யதார்த்தமான நிலைதான். 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, நாடு முழுவதும் ஒரு கோடியே 53 லட்சம் தெருநாய்களும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்து 41 ஆயிரத்து 208 தெருநாய்களும் இருந்தன. தெருநாய்களால் சாலையில் நடந்து செல்பவர்கள் குறிப்பாக நடைபயிற்சி செய்பவர்கள் பயமில்லாமல் நடக்கமுடியவில்லை. பாய்ந்து வந்து கடிக்க வருகிறது. இப்போதெல்லாம் நடைபயிற்சி செய்பவர்கள் பலர் கையில் கம்பு வைத்துக்கொண்டு நடப்பதை பார்க்கமுடிகிறது. இது பேஷனுக்காக அல்ல. திடீரென்று வந்து பாயவரும் நாய்களை துரத்துவதற்காகத்தான். அதுபோல நாய்களின் கழிவுகளால் சாலைகளில் நடக்கும்போதும் பார்த்து, பார்த்து நடக்கவேண்டியது இருக்கிறது. மழைக்காலங்களில் இதனால் கடுமையான சிரமத்தை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

இந்த தெருநாய்களால் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் தொல்லைகளும் சொல்லி மாளாது. தெருநாய்கள் கடிப்பதால் வரும் ரேபிஸ் நோய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் நிச்சயம். அந்த மரணம் மிக கொடுமையானது. இந்தியாவில் ரேபிஸ் நோயால் ஆண்டுக்கு 5,700 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இப்போது இந்த பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்வு சொல்லியிருக்கிறது. டெல்லியில் குழந்தையை தெருநாய் கடித்து உயிரிழந்ததாக வந்த செய்தியின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து ஒரு வழக்கு தொடர்ந்து நாடு முழுவதும் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை தங்கள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, தெருநாய்களுக்கு ஆதரவாக யாரும் வந்தால், அவர்களே தங்களது வீட்டில் தெருநாய்களை வளர்த்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர். சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “டெல்லி மற்றும் தேசிய தலைநகர பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து உடனடியாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள காப்பகங்களில் அடைக்கவேண்டும். ஒரு நாயைக்கூட அங்கிருந்து வெளியே விடக்கூடாது. தெருநாய் இல்லாத டெல்லியை உருவாக்கவேண்டும். இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போடப்படவேண்டும். இந்த நடவடிக்கைகளை தடுப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு பாயும்” என்று உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தெருநாய்கள் தொல்லை தொடர்பாக 2020-ல் தொடரப்பட்ட வழக்கை எடுத்து விசாரித்த நேரத்தில், சுப்ரீம் கோட்டின் உத்தரவை சுட்டிக்காட்டி இதுபோல தமிழக அரசும் தெருநாய்கள், கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற தமிழக தலைமைச்செயலாளர், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை தமிழ்நாட்டில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். எனவே தெருநாய் தொல்லை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது இன்றியமையாதது. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, இப்போது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் தெருநாய் தொல்லை நாடு முழுவதும் பெரிய விவாதத்தை கிளப்பிவிட்டு இருக்கிறது.

1 More update

Next Story