கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்கள்


கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்கள்
x
தினத்தந்தி 24 Oct 2025 3:30 AM IST (Updated: 24 Oct 2025 6:37 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளிக்கூடங்களும் மனநல ஆலோசகர்களை நியமிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

சென்னை

கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் மாணவர்களுக்கு கற்கண்டுபோல தித்திப்பதாக இருக்கவேண்டும். மாணவப்பருவம் முடிந்துவிட்டால் அது திரும்பவராது. இந்த காலகட்டங்கள்தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும். மேலும் பள்ளி, கல்லூரி நாட்களில் உருவாகும் நட்பு ஆயுட்கால நண்பர்களாக்கி ஒவ்வொருவரின் சுகதுக்கத்தில் பங்குவகிக்க வைத்துவிடும். இந்த மாணவப்பருவத்தில் மாணவர்களின் சிந்தையும், செயலும் படிப்பில்தான் இருக்க வேண்டுமே தவிர, மனம் வேறெதிலும் அலைபாய்ந்துவிடக் கூடாது. அந்த குறுகிய காலத்தில் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கினால் அடுத்து வாழப்போகும் நெடியகால வாழ்வு ஒளிமிகுந்ததாக இருக்கும்.

ஆனால் சமீபகாலங்களாக கல்லூரிகளில் நடக்கும் சம்பவங்கள் மனதை நெருடுகின்றன. மாணவர்கள் திடமனது இல்லாதவர்களாக ஒரு சிறுதோல்வியையோ, ஏமாற்றத்தையோ தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ளும் வகையில், தற்கொலைச்சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. ஒரு செமஸ்டரில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலோ அல்லது படிப்பு ஏறவில்லை என்ற காரணத்துக்காகவோ உடனடியாக தற்கொலை முடிவை எடுத்து விடுகிறார்கள். அடுத்து படிக்கவேண்டிய மாணவப்பருவத்தில் காதல்வலையில் வீழ்ந்து, அது நிறைவேறவில்லையென்றாலும் உடனடியாக தற்கொலை முடிவை எடுத்துவிடுகிறார்கள். இதில் பெரும்பாலும் ஒரு தலைகாதலால்தான் இந்த முடிவு நடக்கிறது. காதல் என்பது தவறல்ல. ஆனால் அதற்கென்று ஒரு காலம் இருக்கிறது. படித்து முடித்துவிட்டு ஒரு நல்ல வேலையைத்தேடி தங்கள் சொந்தகாலில் நிற்கும் காலத்தில்தான் காதல் வெற்றிபெறும், அந்த காதல்தான் திருமணத்துக்கு கொண்டுபோய் சேர்க்கும்.

இதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் மாணவர்கள் ஒரு தாய்வயிற்று பிள்ளைகள்போல ஓருயிர் ஈருடலாக இருப்பதற்கு பதிலாக, சாதி-மத பிரச்சினைகளால் பகைவர்களாகி விடுவதோடு மட்டுமல்லாமல், ஒருவரையொருவர் கத்தி, அரிவாளால் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் பல கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் அரங்கேறுகின்றன. சில இடங்களில் ஆசிரியர்களே மாணவர்களால் தாக்கப்படும் அவலமும் இருக்கிறது. புத்தகங்கள் இருக்கவேண்டிய பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகப்பையில் அரிவாளை எடுத்துக்கொண்டுவரும் அவலங்களும் சில மாவட்டங்களில் அடிக்கடி நடக்கிறது. இதுமட்டுமா? பெற்றோரைக்கூட தாக்கும் கொடூர மனநிலைக்கும் மாணவர்கள் சென்றுவிட்டனர். கடந்த 20-ந்தேதி உளுந்தூர்பேட்டையில் படிக்காததை கண்டித்த தாயை, 9-ம் வகுப்பு மாணவன் கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் தடுக்க, சலனப்பட்டிருக்கும் மாணவர்களின் மனதை சாந்தப்படுத்த ஒவ்வொரு கல்லூரியிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் பி.சங்கர் பிறப்பித்துள்ளார்.

இதற்கு வழிகோலியது சுப்ரீம் கோர்ட்டின் 15 வழிகாட்டுதல்கள்தான். அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரேசீரான மனநல கொள்கையை வகுத்து செயல்படுத்த வேண்டும், 100-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் சிறுகுழந்தைகள் மற்றும் பருவவயதிலுள்ள மாணவர்களுக்கு மனநல பயிற்சியளிக்கும் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த மனநல ஆலோசகர் ஒருவரையோ அல்லது சமூகநல அலுவலரையோ நியமிக்கவேண்டும், அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கும் மனநல பயிற்சிகளை பெற உதவ வேண்டும், மேலும் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்துக்கு ஆளாகாத வகையில், அவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பன போன்ற சுப்ரீம் கோர்ட்டின் இந்த வழிகாட்டுதல்களை நிறைவேற்ற தமிழக அரசு மாநிலளவில் சுகாதாரத்துறை இணைச்செயலாளர் டாக்டர் வினீத் தலைமையில் மனநல நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இந்த குழுதான் ஒரேசீரான மனநல கொள்கையையும் வகுக்கும். உயர்கல்வித்துறை செயலாளர் பி.சங்கர் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மனநல ஆலோசகரை நியமிக்கவேண்டும் என்று பிறப்பித்துள்ள உத்தரவைப்போல சற்றும் காலம் கடத்தாமல் அனைத்து பள்ளிக்கூடங்களும் மனநல ஆலோசகர்களை நியமிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

1 More update

Next Story