வரலாறு காணாத பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை

பம்பையில் இருந்து நீலிமலை வழியாக சன்னிதானத்துக்கு சுமார் 11 கிலோ மீட்டர் செல்ல 10 மணி நேரம் ஆனது.
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து கருப்பு, நீலம் அல்லது காவி உடை அணிந்து ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்ற பக்தி கோஷத்துடன் செல்கிறார்கள். இந்த விரதத்தில் பிரமாச்சாரிய விரதம்தான் முக்கியமானது. தினமும் சூரியன் உதிக்கும் முன்பும், சூரிய அஸ்தமனத்துக்கு பிறகும் குளித்து பூஜை செய்யவேண்டும். விரதம் தொடங்கும் முதல் நாளில் கழுத்தில் அணியும் துளசிமணி மாலையை சபரிமலைக்கு போய்விட்டு வந்த பிறகுதான் கழற்றி விரதத்தை முடிப்பார்கள். சபரிமலைக்கு செல்லும் அன்று தலையில் இருமுடி கட்டி புறப்படுவார்கள்.
கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் 4,134 அடி உயர மலை உச்சியில் சபரிமலை இருக்கிறது. அங்குதான் அய்யப்பன் குடி கொண்டிருக்கிறார். அவர் வீற்றிருக்கும் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் மார்கழி 12-ந்தேதி வரை மண்டல பூஜையும், மார்கழி 15-ந்தேதி முதல் தை மாதம் 6-ந்தேதி வரை மகரஜோதி திருவிழாவும் விமரிசையாக நடக்கிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் இந்த இரு பூஜைகளிலும் கலந்துகொள்ள 48 கிலோ மீட்டர் காட்டுவழி பாதை என்ற பெருவழியிலும், இதேபோல சிறுவழி பாதையிலும் சென்று பம்பையில் புனித நீராடிவிட்டு அங்கிருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, சரங்குத்தி கடந்து 18 படிகள் ஏறி சன்னிதானத்தில் உள்ள அய்யப்பனை தரிசிப்பார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கிய நாளிலேயே வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இவ்வளவுக்கும் ஆன்லைன் மூலம் தினமும் பதிவுசெய்யும் 70 ஆயிரம் பேர், உடனடியாக செல்ல பம்பையில் பதிவு செய்யும் 20 ஆயிரம் பேர் என 90 ஆயிரம் பக்தர்களுக்குத்தான் அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளிலேயே வந்த லட்சக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்தமுடியவில்லை. பம்பையில் இருந்து நீலிமலை வழியாக சன்னிதானத்துக்கு சுமார் 11 கிலோ மீட்டர் செல்ல 10 மணி நேரம் ஆனது. வழியில் உணவு, தண்ணீர் இல்லாமல் பலர் சோர்வடைந்தனர். பெண்களை பொறுத்தமட்டில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் மட்டுமே செல்ல அனுமதி என்ற நிலையில் முதல்நாளில் 59 வயதான ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்த சோகம் நிகழ்ந்தது. பக்தர்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் அபிஷேகத்துக்காக காத்திருக்காமல் உடனடியாக மலையில் இருந்து இறங்கவேண்டும் என்று போலீசார் கூறினார்கள்.
தற்போது தரிசனத்துக்கு குறைந்தது 5 மணி முதல் 10 மணி நேரம் வரை ஆகிறது. பக்தர்களின் எண்ணிக்கை சற்று கட்டுக்குள் இருந்தாலும், வரும் நாட்களில் கூட்டம் நிரம்பி வழியாது என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால் விரதம் இருக்கும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யாமல் திரும்பினால் மனநிறைவு கொள்வதில்லை. எனவே காலை நடைத்திறப்பு முதல் பிற்பகல் 1 மணி வரை நெய் அபிஷேகம் மட்டும் செய்தால்போதும், இதனால் கூட்டமும் குறையும், அய்யப்ப பக்தர்களும் மனநிறைவோடு திரும்புவார்கள் என்கிறார், 56 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலை சென்றுவரும் குருசாமி ஒருவர். இதுதவிர வேறு எந்தவகையில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று தேவஸ்தானமும், கேரள அரசும் ஆராய்ந்து நல்ல முடிவுகளை உடனடியாக எடுப்பது அவசியம்.






