பீதி வேண்டாம்; ஆனால் எச்சரிக்கை அவசியம்

கொரோனா பரவிவிடுமோ என்று பீதி அடைய தேவையில்லை. என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட ஒரு அறிக்கை மறந்துபோயிருந்த பல சம்பவங்களை தட்டி எழுப்பியது. அந்த அறிக்கையில், 'இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் மிக குறைந்த அளவே சமூகத்தில் இருக்கிறது. நோய் காணப்பட்ட நபர்களுக்கு எவ்வித தீவிர தொற்றுக்கான அறிகுறிகளும் காணப்படவில்லை. மேலும் இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றினால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் மூலமாக 4-5-2025 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 'தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா சமூக பரவலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகிறது.
வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் பரம்பரைகளான 'ஜேஎன்.1, எக்ஸ்.இ.சி.' போன்றவைகளே காணப்படுகிறது. புதிதாக எவ்விதமான உருமாறிய கொரோனா வைரஸ்களும் பரவவில்லை. இதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. உலக அளவில் இந்த நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சரியான சுவாச வழிமுறைகளை கடைபிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவதோடு, காய்ச்சல், சுவாச மண்டலத்தில் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் குறிப்பாக இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள டாக்டர்களை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்' என கூறியுள்ளார்.
ஆனால் ஏப்ரல் மாதம் 'என்.பி.1.8.1' என்ற புது வகை கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் சொன்னதை அவர் குறிப்பிடவில்லை. சமீபத்தில் மத்திய அரசாங்க சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல் நடத்திய ஆய்வு கூட்டத்தில், 'இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது' என்று கூறி விட்டு, கடந்த 19-ந்தேதி நிலவரப்படி, இந்தியாவில் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மராட்டியம், கேரளா மற்றும் தமிழ்நாட்டில்தான் இந்த 257 பேரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 66 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதேபோல், கடந்த வாரம் சனிக்கிழமை கணக்குப்படி, கர்நாடகாவில் 35 பேரும், கேரளாவில் 182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் லேசான பாதிப்புதான் இருக்கிறது. யாருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய தேவை இல்லை. இவர்களுக்கு எல்லாம் மூக்கில் இருந்து சளி வடிதல், தொண்டை வறட்சி, சோர்வு போன்ற அறிகுறிகள்தான் இருக்கிறது. இப்போதுள்ள கொரோனா பாதிப்புக்கு காரணமான வைரஸ் வகைக்கும், கடந்த கொரோனா அலையின் பாதிப்புக்கு காரணமான வைரசுக்கும் பெரும் வித்தியாசம் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால் யாரும் கொரோனா பரவிவிடுமோ என்று பீதி அடைய தேவையில்லை. என்றாலும், அந்த கொடிய அரக்கன் பரவிவிடாமல் தடுக்க மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இருக்கிறது. எனவே கொரோனாவுக்கான சிறிய அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதும், ஏற்கனவே கொரோனா தொற்று காலத்தில் பின்பற்றிய முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதும் சாலச்சிறந்தது.