வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் ஜெர்மனி

ஜெர்மனி நாட்டில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
திரை கடலோடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. வியாபாரமோ, வேலைவாய்ப்போ உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி சென்று, தன்வசப்படுத்துவதில்தான் பணம் சம்பாதிக்கும் அழகான வழிமுறை இருக்கிறது. ஜெர்மனி நாட்டில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உலகம் முழுவதிலும் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்புகளுக்காக மாணவர்கள் விரும்பி செல்லும் இடமாக தற்போது ஜெர்மனி திகழ்கிறது. அங்கு தகுதி பெற்றவர்கள் இல்லாததால் பல வேலைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய தொழிற்சாலைகளையெல்லாம் நவீனப்படுத்தும் பணிகள் மிக வேகமாக நடந்து கொண்டு இருப்பதால், என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு கடும் கிராக்கி இருக்கிறது.
இதேபோல பாலிடெக்னிக் படித்தவர்களுக்கும் வேலை இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் தொடர்பு மற்றும் நுகர்வோர் மின்னணு தொழில்களிலும் வேலைக்காக நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். டாக்டர்களுக்கு உதவியாக இருந்து நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் நர்சு பணிக்கும் தேவை அதிகமாக இருப்பதால், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற நர்சுகளுக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது. இதற்காக அங்கு விசா விதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் திறன் பெற்ற எலக்ட்ரீசியன், மெக்கானிக்குகள், கார்பெண்டர்கள், பிளம்பர்கள், டிரைவர்கள், போக்குவரத்து மேலாளர்கள், இயற்கை விஞ்ஞானிகள், பசுமைவெளி என பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நடப்பாண்டு கடந்த அக்டோபர் மாதம் வரையில் மட்டும் கேரளாவில் இருந்து 900 நர்சுகளை அம்மாநில அரசு ஜெர்மனிக்கு அனுப்பியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மேலும் 700 நர்சுகளை அனுப்புவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துவருகிறது. தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களை உடனடி வேலைவாய்ப்புகளை பெற தகுதியானவர்களாக மாற்றும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை தொழில்நுட்ப கல்வி கமிஷனர் இன்னசென்ட் திவ்யா செய்துவருகிறார். தமிழ்நாட்டில் 55 அரசு பாலிடெக்னிக்குகளும், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளும், 320 தனியார் பாலிடெக்னிக்குகளும் இருக்கின்றன. இதில் முதல் கட்டமாக 55 அரசு பாலிடெக்னிக்குகளில் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜெர்மன் மொழியை இலவசமாக கற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்துவருகிறார். இதற்கான வகுப்புகள் மாணவர்களுக்கு தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ படிப்புகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் உள்ள வேலைவாய்ப்புகளை எளிதில் பெறுவதற்கு இந்த படிப்புகளைப்போல, ஜப்பான் மொழியை கற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டால் அங்கு மட்டுமல்லாமல், நமது நாட்டில் உள்ள ஜப்பான் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளை பெறமுடியும். அரசு பாலிடெக்னிக்குகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் மொழிகளை கற்றுக்கொடுப்பது மிகவும் வரவேற்புக்குரியது. இதுபோல அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக்குகளிலும் ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, சீனா போன்ற நாடுகளின் மொழிகளை கற்பிக்க தொழில்நுட்ப கல்வி ஆணையரகம் வசதி செய்து கொடுக்கவேண்டும். மேலும் தமிழக அரசின் கீழ் இயங்கி வரும், அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு தேடித்தரும் நிறுவனமும் கேரளாவைப்போல நிறைய பேருக்கு வெளிநாடுகளில் வேலை தேடித்தரும் பணிகளை மேலும் துரிதப்படுத்தவேண்டும்.






