அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த பரிசு


அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த பரிசு
x

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மந்திரிசபை கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் பலனளிக்கும் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகளின் பங்கு அளப்பரியது. மக்களுக்கான சேவையில் அரசோடு நேரடி தொடர்பில் இருக்கும் அவர்கள் ஒரு நாணயத்தின் 2 பக்கங்களாக கருதப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் கொள்கைகள் வகுத்து செயல்படுத்துகிறார்கள் என்றால், விவசாயிகள் பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் அரசிடம் இருந்து பெற்று உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள். அரசு ஊழியர்கள் தங்களது அன்றாட அலுவல்களை செய்தால்தான் கடைகோடி மக்களும் அரசின் திட்டங்களை பெறமுடியும். அதேபோல விவசாயிகள் பசிப்பிணி போக்கும் உன்னத சேவையை செய்துவருகிறார்கள். விவசாயிகள் சேற்றில் கால்களை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும். இந்த உன்னத பணிகளில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபை 2 நல்ல முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் பலனளிக்கும் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கத்தில் 59 லட்சம் ஊழியர்களும், 60 லட்சம் பென்ஷன்தாரர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கான சம்பள விகிதம் மற்றும் பென்ஷன் கடைசியாக 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பள கமிஷன் ஏற்படுத்தப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்தன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு திருத்தப்பட்ட ஊதியம், பென்ஷன் மற்றும் சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இப்போது பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த சம்பள கமிஷன் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரிசபை முடிவெடுத்துள்ளது. இந்த கமிஷன் அனைத்தையும் ஆராய்ந்து 18 மாதங்களுக்குள் தன் பரிந்துரையை அளிக்கும் என்றாலும், அவைகளெல்லாம் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்துவிடும். இந்த பரிந்துரை 2027-ம் ஆண்டு உத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, இமாசலபிரதேசம், குஜராத் மாநில தேர்தல்கள் வரும் நேரங்களில் அமலுக்கு வந்துவிடும். மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் அமல்படுத்தப்பட்ட உடன், அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கும் புதிய சம்பள விகிதத்தை அறிவிக்கும்.

இதனால் மாநில அரசு ஊழியர்களுக்கும் பலன் கிடைக்கும். அடுத்து விவசாயிகளுக்கு உரம் விலை, சர்வதேச விலையை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உரம் விலை அதிலும் குறிப்பாக யூரியா அல்லாத டை அம்மோனியம் பாஸ்பேட் உரங்களின் விலை வெகுவாக உயர்ந்துவிட்டது. சர்வதேச சந்தையில் 50 கிலோ மூட்டையின் விலை ரூ.3,200 ஆக இருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து விவசாயிகளால் வாங்கி விவசாயம் செய்யமுடியாது. எனவே மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகள் இப்போது வாங்கிக்கொண்டு இருக்கும் ஒரு மூட்டை ரூ.1,350-க்கே கிடைக்கும் வகையில் மானியம் வழங்க ரூ.37,952 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ராபி காலம் அதாவது அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான சாகுபடியின்போது வழங்கப்படும். ஆக ஒரேநேரத்தில் அரசு ஊழியர்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சி அடைய செய்யும் விதமாக இரட்டை அறிவிப்புகள் வந்துள்ளன.

1 More update

Next Story