மக்களிடம் செல்லுங்கள்


மக்களிடம் செல்லுங்கள்
x
தினத்தந்தி 14 Oct 2025 3:30 AM IST (Updated: 14 Oct 2025 3:30 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. எம்.பி.க்களை தொகுதியில் உள்ள மக்கள் இனி வாரத்துக்கு 4 நாட்கள் சந்தித்து தங்கள் குறைகளை சொல்லமுடியும்.

2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன தத்துவ மேதை லாவோ சூ, உதிர்த்த எண்ணற்ற தத்துவங்கள் இன்றும் எல்லா நாடுகளிலும் பல மேற்கோள்களுக்கு சுட்டிக்காட்டப்படுகின்றன. மறைந்த அண்ணா அவரது எழுத்துக்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர். அவர் சொன்ன ஒரு தத்துவம் அன்று மட்டுமல்ல, இன்றும், என்றும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் பொது சேவையில் உள்ள அனைவரும் பின்பற்றக்கூடிய வகையில் பாடங்களை கற்றுக்கொடுப்பதாக இருக்கிறது. அன்று அவர் சொன்னது, ‘‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்கள் அறிந்தவற்றில் இருந்து தொடங்கு. அவர்களிடம் உள்ளவற்றைக் கொண்டு கட்டமை’’.

இந்த வாசகங்களைத்தான் அண்ணா, தி.மு.க.வில் உள்ள தன் தம்பிகள் மக்கள் பணியில் சிறக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அடிக்கடி குறிப்பிடுவார். அதனை இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கையில் எடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களோடு இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சில திட்டங்களை வகுத்துக்கொடுத்துள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் வேலை நாட்களில் மட்டும் தலைமைச்செயலகத்தில் இருந்து தங்கள் பணிகளை கவனித்துவிட்டு வார இறுதி நாட்களில் தங்கள் தொகுதிக்கும், மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் பணி ஆற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு பிறகு அமைச்சர்களை வார இறுதியில் சென்னையில் பார்க்கமுடியவில்லை. தங்கள் மாவட்டங்களிலேயே சுற்றுப்பயணம் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து முதல்-அமைச்சருடைய பார்வை இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விழுந்துவிட்டது. சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி பல ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர், நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான பணிகளை செய்யவேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துக்கள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை தனக்கு அளித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆக தமிழ்நாட்டில் தி.மு.க. எம்.பி.க்களை தொகுதியில் உள்ள மக்கள் இனி வாரத்துக்கு 4 நாட்கள் சந்தித்து தங்கள் குறைகளை சொல்லமுடியும். இனி தொகுதி மக்கள் தங்களுடைய எம்.பி.க்களை எந்த கஷ்டமும் இன்றி எளிதாக சந்திக்கலாம். நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் நலன் குறித்து பேசிய விவரங்களையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு இருப்பதால் அவருக்கு அனுப்பும் அறிக்கையில் சொல்லவேண்டும் என்பதற்காகவும், இனி நாடாளுமன்றத்தில் நிச்சயம் கேள்விகளை கேட்கவேண்டும். விவாதங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்துக்கு எம்.பி.க்கள் ஆளாகியுள்ளனர். இதேமுறையை அனைத்து கட்சிகளும் பின்பற்றினால் தமிழக மக்களின் குறைகளெல்லாம் நிறைவாகும். இதேபோல அனைத்து தொகுதிகளிலும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இப்போது மத்திய அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வழங்குவதை ரூ.10 கோடியாக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில் 6 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட ஒரு எம்.பி. தொகுதிக்கு ரூ.10 கோடி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.

1 More update

Next Story