சுதேசி செயலிகளை பயன்படுத்த தொடங்கும் இந்தியா

வெகுவிரைவில் நமது உள்ளூர் செயலிகள் ஆதிக்கம் செலுத்தபோவது நிச்சயம்.
சுதந்திர போராட்டத்தின்போது தேசப்பிதா மகாத்மா காந்தி பற்றவைத்த சுதேசி இயக்கம் என்ற தீப்பொறி இப்போது பற்றி எரிய தொடங்கிவிட்டது. அன்று காந்தியடிகள், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைத்தான் வாங்கவேண்டும், ஆங்கிலேயர் தயாரித்த பொருட்களை புறக்கணிக்கவேண்டும்’ என்ற சுதேசி இயக்கத்தையே நாடு முழுவதும் விதைத்தார். நெருக்கடி நிலையின்போது இந்திராகாந்தியும், ‘இந்தியனாய் இரு. இந்திய பொருட்களையே வாங்குவோம்’ என்ற கோஷத்தையே முன்வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியும் பதவியேற்றதில் இருந்தே டிஜிட்டல் புரட்சியில் அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் சாதனங்களையே பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார்.
முதலாவதாக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு என்ற அந்நிய நாட்டு கார்டுகளுக்கு பதிலாக ரூபே என்ற இந்தியாவின் சுயசார்பு கார்டை அறிமுகப்படுத்தி சுதேசி இயக்கத்துக்கு வலு சேர்த்தார். இன்று உலகின் பல நாடுகளில் இந்திய கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதன்பிறகு நாம் பயன்படுத்தும் பணப்பரிமாற்றத்துக்கான யு.பி.ஐ. சேவை உலகுக்கே முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. அடுத்ததாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் மெயில் மற்றும் வாட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் போன்ற வெளிநாட்டு சமூக ஊடகங்களுக்கு பதிலாக சுதேசி செயலிகளை பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றி வைத்துவிட்டு பேசும்போது மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசினார்.
நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்க ஊழியர்கள் தங்கள் தகவல்தொடர்புக்கு வாட்ஸ் அப் செயலிக்கு பதிலாக சாண்ட்ஸ் என்ற இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் சில மந்திரிகள் தாங்கள் இப்போது ஜோகோ என்ற தமிழ்நாட்டு நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் ஜோகோ மெயிலை பயன்படுத்த தொடங்கிவிட்டோம் என்று அறிவித்தனர். இது கூகுள் மெயிலுக்கு மாற்றான மெயில் சேவையாகும். பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசனை நடத்திய கேபினட் செயலாளர் டி.வி.சோமநாதன், அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உள்நாட்டு டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களை உருவாக்கும் நிலையை ஊக்குவிக்கவேண்டும். அரசின் மொத்த தகவல் பரிமாற்றங்களும் சுதேசி தளங்கள் மூலமே பரிமாறிக்கொள்வதை உறுதி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கத்தில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்களின் மெயில் கணக்குகளை பராமரித்து வரும் தேசிய தகவல் மையம் இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களின் சர்வர் மூலம் பயன்படுத்தி வந்ததற்கு பதிலாக, இனி உள்நாட்டு நிறுவனமான ஜோகோ நிறுவனத்தின் ஜோகோ மெயில் சர்வருக்கு மாறிவிட்டது. இப்போது அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மக்களும் வாட்ஸ் அப்புக்கு பதிலாக அரட்டை என்ற ஜோகோ செயலிக்கும், கூகுள் குரோமுக்கு பதிலாக ஜோகோவின் உலா என்ற பிரவுசருக்கும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பிரதமரும், முதல்-மந்திரிகளும் தங்கள் பதிவுகளை எக்ஸ் தளத்தில் பதிவிடுகின்றனர். அதற்கு பதிலாக சுதேசி தளமான அரட்டையில் பதிவிட்டால் நன்றாக இருக்கும். ஆக வெகுவிரைவில் நமது உள்ளூர் செயலிகள் ஆதிக்கம் செலுத்தபோவது நிச்சயம். இதற்கு தொடக்கமாக தூய தமிழ் பெயர்களில் அரட்டை என்றும், உலா என்றும் வந்துள்ள செயலிகளை நாடு முழுவதும் பயன்படுத்துவது தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும் பெருமையாகும்.






