இந்தியா இதை சமாளிக்கும்

டிரம்பின் வரி உயர்வை, ஜி.எஸ்.டி. குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியா இதை சமாளிக்கும் என்று உறுதிப்பட கூறலாம்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற உடனேயே ‘அமெரிக்காதான் முதலில்’ என்ற பிரகடனத்தை அவர் விடுத்தது சரியென்றாலும், அதற்காக மற்ற நாடுகளோடு வர்த்தக போரை தொடுத்திருப்பது சரியல்ல. இந்தியா, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வாங்குகிறது. அமெரிக்கா சொல்கிறது என்பதற்காக மற்ற நாடுகளில் இருந்து மட்டும் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை எகிறி நமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்த அமெரிக்கா திட்டமிடுகிறது.
“எங்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அவர்கள் நலனை ஒருபோதும் விட்டுத்தராது. அதற்காக பெரிய விலை கொடுக்கவேண்டும் என்பதையும் நான் அறிவேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி மிக துணிச்சலாக உறுதிப்பட தெரிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரூ.7.6 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ரூ.3.6 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளார். சீனாவுக்கு தொடக்கத்தில் அதிக வரியை விதித்து பார்த்தார். ஆனால் அவருடைய பாச்சா சீனாவிடம் பலிக்கவில்லை. பதிலுக்கு பதிலாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கவே பின்வாங்கிவிட்டு இப்போது 30 சதவீத வரியை விதித்துள்ளார். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதம் அமெரிக்கா, நெதர்லாந்து, சீனா, வங்காளதேசம், சிங்கப்பூர், இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஜெர்மனி, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு தான் செல்கின்றன. இந்த பட்டியலை 20 நாடுகளாக்கிய இந்தியா, இப்போது 50 நாடுகளாக்கி விட்டது. இதன் மூலம் 90 சதவீத ஏற்றுமதியை அடைந்து விடும் என்பதால் நிலைமையை இந்தியா துணிச்சலாக எதிர்கொள்ளலாம். உள்நாட்டு நுகர்வை அதிகப்படுத்த ஜி.எஸ்.டி. வரியை குறைத்தால் மக்களின் வாங்கும் சக்தி உயரும்.
ஏற்கனவே பட்ஜெட்டில் வருமான வரி கட்டுவதற்கான வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தியதால், ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி கட்டவேண்டியது இல்லை. அதன் மூலம் மிச்சப்படுத்தும் தொகையை மக்கள் செலவு செய்வதால் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. இதுபோல அமெரிக்காவின் வரி உயர்வினை சமாளிக்க இன்னும் உள்நாட்டு நுகர்வினை அதிகப்படுத்தவேண்டும். இதற்காக ஜி.எஸ்.டி.யை குறைக்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறினார்கள். அதை செயல்படுத்தும் விதமாக பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில், ஜி.எஸ்.டி. குறைப்பு தீபாவளி பரிசாக மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டார். 1940-ம் ஆண்டு 2-ம் உலகப் போரின்போது, லண்டன் மீது ஜெர்மனி குண்டு மழை பொழிந்தது. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், “லண்டன் வில் டேக்’’ என்று கூறி தனது மக்களை தைரியமூட்டினார். அது போல இந்திய மக்களும் டிரம்பின் வரி உயர்வை, ஜி.எஸ்.டி. குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் “இந்தியா வில் டேக்’’ என்று அதாவது இந்தியா இதை சமாளிக்கும் என்று உறுதிப்பட கூறலாம்.






